உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 27, 2010

'டான்செட்' நுழைவுத் தேர்வுக்கு ஒரு லட்சம் பேர் விண்ணப்பம்


                 எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., மற்றும் எம்.இ., படிப்புகளுக்கான, 'டான்செட்' நுழைவுத் தேர்வெழுத, ஒரு லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

                   எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., - எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க்., - எம்.பிளான் ஆகிய படிப்புகளுக்கு, சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் சார்பில், 'டான்செட்' நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. பல்கலைக் கழகங்கள், அரசு, அரசு உதவிபெறும் பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இடங்களும், தனியார் பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களும், 'டான்செட்' நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. இந்த ஆண்டு, 'டான்செட்' நுழைவுத் தேர்விற்கான விண்ணப்பங்கள், கடந்த 1ம் தேதி முதல் வழங்கப்பட்டது. கடைசி நாளான நேற்றும், நூற்றுக்கணக்கான மாணவர்கள், 'டான்செட்' நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். 'டான்செட்' நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் நேற்று மாலை 5:30 மணியுடன் முடிவடைந்தது.

                   இந்த ஆண்டு, 'டான்செட்' தேர்வெழுத, ஒரு லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். எம்.பி.ஏ., படிப்பிற்கு 45 ஆயிரம் பேர், எம்.சி.ஏ., படிப்பிற்கு 20 ஆயிரம் பேர், எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க் - எம்.பிளான் படிப்புகளுக்கு 33 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக எம்.இ., - எம்.டெக்., படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கடந்த 2008ம் ஆண்டு எம்.பி.ஏ., படிப்பிற்கு 35 ஆயிரம் பேர், எம்.சி.ஏ., படிப்பிற்கு 25 ஆயிரம் பேர், எம்.இ., - எம்.டெக்., படிப்பிற்கு 11 ஆயிரத்து 500 பேர் விண்ணப்பித்தனர். கடந்த 2009ம் ஆண்டு எம்.பி.ஏ., படிப்பிற்கு 54 ஆயிரத்து 100 பேர், எம்.சி.ஏ., படிப்பிற்கு 19 ஆயிரத்து 900 பேர், எம்.இ., - எம்.டெக்., படிப்பிற்கு 30 ஆயிரத்து 200 பேர் விண்ணப்பித்தனர்.

                  கடந்த ஆண்டு எம்.பி.ஏ., படிப்பிற்கு விண்ணப்பித்த மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்த போதும், இந்த ஆண்டு அப்படிப்பிற்கு விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. எம்.இ., - எம்.டெக்., படிப்பிற்கு 2008ம் ஆண்டு 11 ஆயிரத்து 500 பேர் விண்ணப்பித்த நிலையில், இந்த ஆண்டு எம்.இ., - எம்.டெக்., படிப்பிற்கு விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை 33 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ஐ.டி., துறையில் வேலைவாய்ப்பு குறைந்திருப்பதும், அதிக மாணவர்கள் பொறியியல் இளநிலை படிப்பில் சேர்ந்தபோதும், அதில் பலருக்கு வேலை கிடைக்காததால், முதுநிலை பட்டப்படிப்பிற்கு விண்ணப்பிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது . வரும் மே மாதம் 29ம் தேதி, காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை எம்.பி.ஏ., படிப்பிற்கும், மதியம் 2:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை எம்.சி.ஏ., படிப்பிற்கும் நுழைவுத் தேர்வு நடக்கிறது. எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க் - எம்.பிளான் ஆகிய படிப்புகளுக்கு மே மாதம் 30ம் தேதி காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும் நுழைவுத் தேர்வு நடக்கிறது. 'டான்செட்' நுழைவுத் தேர்வு முடிவுகள், ஜூன் 20ம் தேதிக்கு பிறகு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior