உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 30, 2010

சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரங்களில் ஆலமர செடிகள்





சிதம்பரம்:

                வரலாற்று சிறப்புவாய்ந்த சிதம்பரம் நடராஜர் கோவிலில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராஜகோபுரங்கள் முறையாக பராமரிப்பின்றி ஆலமர செடிகள் வளர்ந்துள்ளன. நாளுக்கு நாள் இச்செடிகள் அதிகரித்துவரும் நிலையில், மரமாக வளர்ந்து கோபுரங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்முன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

                   கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் "பூலோக கைலாயம்' என்றழைக்கப்படும் ஆகாயத்தலமான நடராஜர் கோவில் அமைந்துள்ளது. தரிசித்தால் முக்தி அளிக்கும் இக்கோவிலுக்கு உலகம் முழுவதும் இருந்தும் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதால் உலக அளவில் சிறப்பு பெற்ற தலமாக விளங்குகிறது. நடராஜர் கோவில் 51 ஏக்கர் நிலப்பரப்பில் அமைத்துள்ளது. கோவிலின் நான்கு திசைகளிலும் ராஜகோபுரங்கள் சிற்ப கலைநுட்பத்துடன் கட்டப்பட்டு கம்பீரமான தோற்றத்துடன் கோவிலுக்கு அழகு சேர்க்கின்றன. 135 அடி உயரத்தில் இருந்து 140 அடி உயரம் வரை உள்ள கோபுரங்களின் நுழைவாயில் பகுதி மட்டுமே 49 அடி உயரம் கொண்டவை. ஏழு நிலை கோபுரங்களின் மேல் பகுதி புராண இதிகாசங்களில் கூறப்படும் இறைவனை அருள் விளையாடல்கள், கூத்தின் விகற்பங்கள் காண்போரை கவரும் வகையில் அமைந்துள்ளது. கோபுர வாயிலில் நிலைத் தூண்கள் மூன்றடி சதுரமும், முப்பது அடி உயரமும் கொண்ட ஒரே கல்லால் ஆனவை. சோழ மன்னர்களாலும், விஜயநகர மன்னர்களாலும் கோபுரங்கள் கட்டப்பட்டவை.

                 கிழக்கு ராஜகோபுரம் இரண்டாம் குலோத்துங்க சோழனால் கி.பி.1138 -1150ம் ஆண்டில் கட்டப்பட்டது. 108 பரத நாட்டிய கர்ணங்கள் இடம் பெற்றுள்ளது. மேற்கு கோபுரம் இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனால் கி.பி. 1237-40ம் ஆண்டில் கட்டப்பட்டது. மேற்கு கோபுரம் ஜடாவர்ம சுந்தரபாண்டியன் கி.பி.1207ம் ஆண்டு கட்டினார். வடக்கு கோபுரம் விஜயநகர அரசனான கிருஷ்ணதேவராயரால் 140 அடி உயரத்தில் கட்டப்பட்டது. சிற்பக்கலை சிறப்பை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ள நான்கு ராஜகோபுரங்களும் 800 ஆண்டுகளுக்கு குறையாமல் கட்டப்பட்ட வரலாற்று சிறப்பு வாய்ந்தது.

              இக்கோபுரங்கள், தொழிலதிபர்கள் உதவியுடன் புதுப்பிக்கப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தனித்தனி தேதிகளில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. ஆனால், கோபுரங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் இதில் தற்போது ஆலமர செடிகள் வளர்ந்துள்ளன. கோவிலை கைப்பற்றுவதில் ஆர்வம் செலுத்தும் தீட்சிதர்களும் சரி, அறநிலையத் துறையும் சரி கோபுரத்தில் உள்ள செடிகளை அகற்ற அக்கறை எடுத்துக் கொள்ளாததால் செடிகள் நாளுக்கு நாள் வளர்ந்து வருகின்றன.

              செடிகள் அகற்றப்படாத நிலை நீடித்தால் கோபுரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தில் விரிசல், காளஸ்தியில் ஏற்பட்ட பாதிப்பு போன்றவை இங்கு ஏற்படாமல் தடுக்கவும், வரலாற்று சின்னங்களான கோபுரங்களை பாதுகாக்கவும் போர்க்கால அடிப்படையில், நடராஜர் கோவில் ராஜகோபுர செடிகளை அகற்ற வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior