விருத்தாசலம்:
விருத்தாசலம் புறவழிச்சாலை பணிகள் முடிந்தும், ரயில்வே மேம்பாலப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் சாலையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, தமிழ்நாடு ரோடு செக்டார் புராஜக்ட் மூலம் 20 கோடி ரூபாய் செலவில், கடலூர் ரோடு குப்பநத்தத்தில் இருந்து வேப்பூர் ரோடு மணலூர் வரை 9.1 கி.மீ., தூரத்திற்கு புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. 2010 ஜனவரிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, கடந்த 2005ம் ஆண்டு நவம்பர் இறுதியில் பணிகள் துவங்கியது.
புறவழிச்சாலை அமைக்கப்படும் பாதையில் மணிமுக்தா ஆறும், ரயில் பாதையும் செல்வதால் இந்த இரண்டு இடங்களிலும் மேம்பாலங்கள் அமைக்க 2.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, "இர்கான்' எனப்படும் "இந்தியன் ரயில்வே கன்ஸ்ட்ரக்ஷன்' வசம் பணி ஒப்படைக்கப்பட்டது.கடந்த ஜனவரி மாதத்திற்குள் மற்ற பணிகள் அனைத்தும் முழுமையாக முடிந்து புறவழிச்சாலை போக்குவரத்திற்கு தயாராக உள்ள நிலையில், ரயில்வே மேம்பால பணிகள் மட்டும் நான்கு ஆண்டுகளாக ஜவ்வாக இழுத்துச் செல்கிறது. இதுவரை பில்லர்கள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன. ரயில்வே மேம்பால பணி கிடப்பில் போடப்பட்டதால், புறவழிச்சாலையை பயன்படுத்த முடியாமல் உள்ளது.
பணிகள் திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் முடிந்துவிடும் என்பதை கருத்தில் கொண்டு தான் விருத்தாசலம் - வேப்பூர் சாலையில் உள்ள ரயில் பாதையின் மேல் மேம்பாலம் அமைக்கும் பணி துவங்கப்பட்டது. அவ்வாறு முடித்திருந்தால் விருத்தாசலம் - வேப்பூர் சாலையில் நிறுத்தப்பட்ட வாகனப் போக்குவரத்து, புறவழிச்சாலை வழியாக சென்றிருக்கும்.வேறு வழியின்றி போக்குவரத்து நெரிசலுடன் ரயில்வே ஜங்ஷன் வழியாக மாற்றுப் பாதையில் வாகனங்கள் சென்று வருகின்றன. ரயில்வே மேம்பால பணியை துரிதப்படுத்தி விரைந்து முடிக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக