உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 30, 2010

கடலூர் சிப்காட் ஆலைகளின் ரசாயனக் கழிவுகள் கடலில் கலப்பதாகப் புகார்

கடலூர்:

                அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக ரசாயனத் தன்மை கொண்ட  ரசாயனக் கழிவுகள் சிப்காட் தொழிற்சாலைகளிலிருந்து கடலில் கலப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது.கடலூர் மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தலைமையில் நடந்தது. 

சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து, கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள்:

                  கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் இயங்கும் ரசாயனத் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் சுத்திகரிக்கப்பட்ட ரசாயனக் கழிவுகளை சேகரித்து கடலில் கொண்டுபோய் கலக்கும் கியூசெக்ஸ் நிறுவனம், கடந்த 5 ஆண்டுகளாக கன்சென்ட் டூ ஆபரேட் என்ற அனுமதி வாங்காமல், சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்பட்டு வருகிறது. மாசுக்கட்டுப்பாடு வாரியத்தால் அனுமதிக்கப்பட்ட அளவைவிட பன்மடங்கு ரசாயனத் தன்மை கொண்ட ஆலைக் கழிவுகள் அங்கிருந்து கடலில் கலக்கப்பட்டு வருவது ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. 

                இதுகுறித்து மாசுக் கட்டுப்பாடு வாரியம் நடவடிக்கை எடுக்க வில்லை.சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை மட்டுமே இந்த நிறுவனம் கடலில் கலக்க வேண்டும். சுத்திகரிக்கப்படாத ரசாயனக் கழிவுகளைக் கடலில் கலப்பதுடன் உரிய அனுமதியின்றி செயல்படும் இந்த நிறுவனத்தை மூட உத்தரவிட வேண்டும்.ரசாயனக் கழிவுகளால் மக்கள் வாழத் தகுதியற்ற நகரங்கள் பட்டியலில் இந்தியாவில் 16-வது இடத்தில் கடலூர் இருக்கும் நிலையில், புதிய தொழிற்சாலைகள் அமைவது குறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை விளக்கம் கேட்டு இருக்கிறது. மாசுக் கட்டுப்பாடு வாரியம் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து அப்பகுதி மக்களுக்கு விளக்கிக் கூறுவது இல்லை. விதிகளை மீறி, சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்படும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற உத்தரவு உள்ளது. ஆனால் கடலூர் சிப்காட் தொழிற்சாலைகள் பல அனுமதியை புதுப்பிக்காமலேயே இயங்குகின்றன. 

                 தொழிற்சாலை மாசு குறித்து, பொதுமக்கள் புகார் தெரிவிக்க செல்ஃபோன் மற்றும் தொலைபேசி எண்களை அறிவிப்புப் பலகைகளில் வெளியிட வேண்டும். தொழிற்சாலைகளில் இருந்து ரசாயனப் பொருள்கள் மற்றும் கழிவுகளை லாரிகளில் எடுத்துச் செல்லும்போது, அடிக்கடி சாலைகளில் வழிந்து கொட்டிவிட்டுச் செல்வதை தடுக்க வேண்டும். அவற்றைப் பாதுகாப்பான முறையில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.உலகப் பிரசித்திபெற்ற பிச்சாவரம் மாங்குரோவ் காடுகளுக்கு 7 கி.மீ. தொலைவில் அனல் முன் நிலையங்களை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது. கடற்கரை ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்படியும் இத்தகைய திட்டங்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது. மாங்குரோவ் காடுகளை தொழிற்சாலை பாதிப்புகளில் இருந்து காப்பாற்ற, மாவட்ட நிர்வாகம் அரசுக்குப் பரிந்துரைக்க வேண்டும்.  மாசுக்கட்டுப்பாடு வாரிய அலுவலகத்தை சிப்காட் வளாகத்தில் கட்ட வேண்டும். இதற்காக நிதி ஒதுக்கி பல ஆண்டுகள் ஆயிற்று என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

                    கூட்டத்தில் மாவட்ட மாசுக்கட்டுப்பாடு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் சேகர், மாவட்ட ஊராட்சித் தலைவர் இரா.சிலம்புச்செல்வி, உறுப்பினர் ப.சண்முகம், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எம்.நிஜாமுதீன், அருள்செல்வம், ராமநாதன், புகழேந்தி, ஊராட்சித் தலைவர்கள் ஆனந்தன், பாவாடை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior