கடலூர்:
அனுமதி பெறாத வீட்டு மனைகளை வாங்க வேண்டாம் என உள்ளாட்சி அமைப்புகள் திடீரென அறிவித்து வருவதால், ஏற்கனவே மனைகளை வாங்கியவர்கள் கலக்கமடைந்துள்ளனர்.பிள்ளைகளின் படிப்பு, வேலை மற்றும் வியாபாரம் தொடர்பாக கிராமப் பகுதி மக்கள் நகரப் பகுதிகளுக்கு இடம் பெயர்வது கடலூர் மாவட்டத்தில் அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, வடலூர், குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், புவனகிரி, சிதம்பரம் போன்ற நகரப் பகுதிகளில் வீடுகளின் தேவை அதிகரித்து வருவதால் இப்பகுதிகளில் ரியல் எஸ்டேட் வியாபாரம் படு பிசியாகி உள்ளது.கிராமப் பகுதிகளில் வசிப்பவர்கள் கூட தங்க ளது எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு நகரப் பகுதியில் எதற்கும் ஒரு வீடு இருக்க வேண்டும் என போட்டி போட்டுக் கொண்டு வருவதாலும், அதற்கேற்ப வீட்டு மனைகள் இல்லாததால், இருக் கின்ற மனைகளின் விலை கடந்த நான்காண்டுகளில் பல மடங்கு உயர்ந் துள்ளது. வீட்டு மனைகளின் தேவை அதிகரித்துள்ளதை அறிந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் நகரப் பகுதி மற்றும் நகரத்தை ஒட்டிய ஊராட்சி பகுதிகளில் உள்ள விளை நிலங் களை வாங்கி மனைப் பிரிவுகளாக மாற்றி இரட்டிப்பு விலைக்கு விற்று வருகின்றனர்.கடந்த காலங்களில் புதிய நகர்கள் உருவாக்க வேண்டும் எனில் அந்தந்த பகுதிகளில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி மற்றும் "டி.டி.பி.,' அனுமதி பெற் றால்தான் பத்திரப் பதிவு செய்ய முடியும்.
இந்த அனுமதி பெற புதிய நகர் களை உருவாக்குபவர்கள் அப்பகுதிக்கு அடிப்படை தேவைகளான 23 அடி அகல சாலை, தெருவிளக்கு, குடிநீர் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்.மேலும், விளையாட்டுத் திடல், பூங்கா அமைக்கவும், பொது உபயோகத்திற்கு தனியாக இடம் ஒதுக்கி உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும். அப் போதுதான் அந்த பகுதிகளுக்கு தேவையான அடிப் படை வசதிகளை அப்பகுதி உள்ளாட்சி அமைப்புகள் செய்து தரும்.ஆனால் தற்போது தங்கள் பெயரில் உள்ள இடத்தை வேறு ஒருவருக்கு விற்க என்.ஒ.சி., சான்றிதழ் தேவையில்லை என்ற சட்ட விதி இருப்பதால், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி பெறாமலேயே நிலங்களை மனைகளாக மாற்றி விற்பனை செய்து வருகின்றனர். இவ்வாறு மாவட் டத்தில் பல்வேறு பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட புதிய நகர்கள் உருவாக் கப்பட்டுள்ளன.
இதில் மனைகளை வாங்கிய பலர் வீடுகளையும் கட்டி வசித்து வருகின்றனர். இந்நிலையில் விருத்தாசலம், நெல்லிக்குப்பம் மற்றும் பண்ருட்டி நகராட்சி நிர்வாகங்கள் உள் ளாட்சி அமைப்புகளின் அனுமதி பெறாத வீட்டு மனைகளை வாங்காதீர் என அறிவித்துள்ளனர். இது தொடர்பாக முக்கிய இடங்களில் அறிவிப்பு பலகைகளை வைத்துள்ளது. அதில், உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி பெறாத மனைகளை வாங்கினால் அந்த இடங்களில் கட்டடங்கள் கட்ட நகராட்சி நிர்வாகம் அனுமதிக்காது. அந்த பகுதிகளுக்கு நகராட்சி சார்பில் எந்தவித அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படமாட்டாது. மேலும், தமிழ்நாடு நகராட்சிகள் சட்டம் 1920 மற்றும் தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சட்டம் 1071 ன் படியும் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது. உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி பெறாத மனைகளை வாங்கியவர்களும், அதில் வீடு கட்டி வசித்து வருபவர்கள் நகராட்சி நிர்வாகங்களின் திடீர் அறிவிப்பை கண்டு கலக்கம் அடைந்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக