கடலூர், டிச. 13:
கடலூர் மத்திய சிறைச் சாலையில் கைதிகள் தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சிகள் அதிகரித்து வருவதற்கு தமிழ்நாடு நுகர்வோர்களின் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் சார்பில் உலக மனித உரிமைகள் தின விழா வியாழக்கிழமை கடலூரில் நடந்தது. நிகழ்ச்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கடலூர் மத்திய சிறைச் சாலையில் தற்கொலைகள், தற்கொலை முயற்சிகள் அதிகரித்து வருகிறது. கைதிகளை மனிதர்களாக நடத்தவில்லை. நீதிமன்றக் காவல் கைதிகளையும் தண்டனைக் குற்றவாளிகளாக நடத்துகிறார்கள். கைதிகளுக்கு இடையே பாகுபாடு காட்டப்படுகிறது. அரசியல் செல்வாக்கும் சாதிய செல்வாக்கும் உள்ளவர்கள், தனிச்சலுகை பெறுகிறார்கள். சிறை வழிகாட்டுதல் வதிகளின்படி, உணவு, சுகாதார வசதிகள், காற்றோட்டமான வசிப்பிடம் வழங்கப்படவில்லை. உளவியல் ரீதியான ஆலோசனைகள் கைதிகளுக்கு வழங்கப்படவில்லை. இதன் காரணமாகவே தற்கொலைகள் அதிகரிக்கின்றன. க டலூர் மத்திய சிறையில் கைதிகளுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலையை சீர்செய்ய உயர்மட்டக்குழு ஒன்றை அமைக்க வேண்டும். விடுதலை ஆகும் கைதிகளுக்கு வாழ்வாதாரத்துக்கான கடன் வசதி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றை செய்ய வேண்டும். கடலூர் சிப்காட் பகுதியில் மனிதர்கள் வாழ முடியாத அளவுக்கு தொழிற்சாலைகளால் நிலம், நீர், காற்று மாசு படுத்தப்பட்டு வருகிறது. அங்கு மனிதர்கள் வழ்வுக்கான உத்தரவாதத்தை அரசு அளிக்க வேண்டும். தியாகவல்லி பகுதியில் அனல்மின் நிலையம் அமைப்பது தொடர்பாக நடந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது, போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை வாபஸ் பெற வேணடும். மனித உரிமை ஆணையம், மகளிர் ஆணையம் உள்ளிட்ட ஆணையங்கள் சுதந்திரமாகச் செயல்பட அடிப்படை வசதிகளும் நிதி ஆதாரங்களும் அளிக்க வேண்டும். க டலூர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இந்தியக் கடற்படையினர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கடல் மீன் ஒழுங்குமுறைச் சட்டத்தை இயற்றக் கூடாது. காவல் நிலையங்களில் சாவுகளையும் சித்திரவதைகளையும் தடுக்க அனைத்து காவல் நிலையங்களிலும் வெப் கேமரா பொருத்தி, அனைத்து நடவடிக்கைகளையும் பதிவு செய்ய வேண்டும் என்று கோரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு நுகர்வோர்களின் கூட்டமைப்பின் நிர்வாகச் செயலாளர் எம்.நிஜாமுதீன் தலைமை தாங்கினார். மீனவர் பாதுகாப்பு இயக்கச் செயலாளர் ஏழுமலை, தனியார் பஸ் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் பண்டரிநாதன், நுகர்வோர் சங்கங்களின் பிரதிநிதிகள் புகழேந்தி, பாலசுப்பிரமணியன், எல்.கே.ரவி, ஆல்பேட்டை பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அருள்செல்வம் நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக