சிதம்பரம், டிச.12:
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மையம் வாயிலாக பயிலும் மாணவர்களின் சேவைகளை மிகவும் விரிவுப்படுத்தும் வகையில் இந்தியாவின் முக்கிய நகரங்களில் உள்ள அண்ணாமலைப் பல்கலை. படிப்பு மையங்கள் கணினி மூலம் ஒருங்கிணைக்கப்படுகிறது.
பரந்த பின்னல் வேலை என்ற இச்சேவையை பல்கலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தொடங்கி வைத்துப் பேசியது: இந்த சேவை மூலம் மாணவர்களின் குறைகளை உடனுக்குடன் மிக விரைவில் தீர்க்கப்படுவதால் அதற்கான நேரம், செலவு மற்றும் பயணம் சேமிக்கப்படுகின்றன.
தொலைதூரக்கல்வி இயக்ககத்தின் நடைமுறை செயல்கள் மற்றும் அலுவலக பணிகள் அனைத்தும் சென்னை, கோயம்புத்தூர், சேலம், திருச்சி, மதுரை, நாகர்கோவில், கல்கத்தா மற்றும் புதுதில்லி ஆகிய படிப்பு மையங்களில் இச்சேவை மூலம் ஒருங்கிணைக்கப்படுகின்றன.
மேலும் சேர்க்கை விண்ணப்பபடிவம், விண்ணப்பம் வழங்கும் விவரம், சேர்க்கை கட்டணம், கல்விக் கட்டணம் மற்றும் பல விவரங்களை தெரிந்து கொள்ள இந்த சேவை பெரிதும் உதவும், ஒரு இடத்தில் நடத்தப்படும் பாடங்கள் செயற்கைகோள் மூலம் கணினி மூலம் இணைக்கப்படுவதால் படிப்பு மையங்களில் இருந்தபடியே அப்பாட வகுப்பை நேரடியாக பெறுவதற்கு மிகவும் பயன்படுகிறது என துணைவேந்தர் எம்.ராமநாதன் தெரிவித்தார். இந் நிகழ்ச்சியில் பதிவாளர் எம்.ரத்தினசபாபதி, தொலைதூரக்கல்வி மைய இயக்குநர் எஸ்.பி.நாகேஸ்வரராவ், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆர்.மீனாட்சிசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக