கடலூர், டிச. 13:
அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க கடலூர் மாவட்டக் கிளை (மார்க்சிஸ்ட்) சார்பில், 15-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் தொடர்ந்து காத்துக் கிடக்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
விவசாயத் தொழிலாளர் சங்க கடலூர் மாவட்டச் செயலாளர் த.ரவீந்திரன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வீடற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு குடிமனைப்பட்டா வழங்கக்கோரி கடலூர் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் மனு அளித்தும் பல்வேறு போராட்டஙகளையும் நடத்தி வருகிறது. 21-9-2006 அன்று நினைவூட்டுப் போராட்டம் நடத்தப்பட்டது. 210 குடியிருப்புகளைச் சேர்ந்த சுமார் 25 ஆயிரம் குடும்பங்கள் குடிமனைப் பட்டாவை எதிர்நோக்கி வாடகைக் குடிசைகளிலும், ஒண்டுக் குடித்தனங்களிலும் இருக்கின்றன.
தமிழக அரசால் செயல்படுத்தப்படும் சிறப்புக் குடிமனை வழங்கும் திட்டம் ஓரளவுக்குப் பயன் அளித்து உள்ளது. ஆனால் இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய கடலூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்பட்டோர் நலத்துறை கடந்த 10 ஆண்டுகளில் குடிமனைப் பட்டா வழங்கும் திட்டத்தில் குறைந்தபட்ச முயற்சிகளைக்கூட எடுத்துக் கொள்ளவில்லை. செயலிழந்து கிடக்கும் இந்தத் துறைகள் உடனடியாக ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்றி அவசர சிகிச்சை அளிக்க வேண்டிய நோயாளியைப் போன்ற நிலையில் உள்ளன.
எனவே எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 15-ம் தேதி காலை 10 மணி முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தொடர்ந்து பிரச்னைக்குத் தீர்வு காணும்வரை, காத்துக் கிடக்கும் போராட்டம் நடத்த இருக்கிறோம். இதில் 1000-க்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் குடும்பங்களாகப் பங்கேற்பர். போராட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் த.ரவீந்திரன் தலைமை வகிப்பார். மாநிலத் தலைவர் ஜி.வீரையன் தொடங்கி வைக்கிறார். எங்கள் போராட்டத்தால் கோபம் கொள்ளாமல் தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும், நீண்டநாள் கோரிக்கையை அலட்சியப்படுத்தாமல் ஆக்கபூர்வமாகப் பரிசீலிக்க வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக