சேத்தியாதோப்பு :
சேத்தியாதோப்பு கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரிகளை கண்டித்து விவசாய சங்கங்கள் சார்பில் இன்று நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் அதிகாரிகளின் சமரசத்தை ஏற்று ஒத்தி வைக்கப்பட்டது.
சேத்தியாதோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலை எல்லைக்கு உட்பட்ட கரும்பு கோட்டங்களில் தனியார் சர்க்கரை ஆலைகள் கரும்பு வெட்டிச் செல்வதை தடுத்து நிறுத்தக்கோரியும், தனியார் சர்க்கரை ஆலைக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகளை கண்டித்து இன்று (4ம் தேதி) சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவதாக கரும்பு விவசாய சங்கங்கள் அறிவித்திருந்தன. அதனைத் தொடர்ந்து நேற்று மாலை ஆலை வளாகத்தில் சமரச பேச்சுவார்த்தை நடந்தது. ஆலையின் தனி அலுவலர் (பொறுப்பு) கலைராஜன், சிதம்பரம் ஆர்.டி.ஓ., ராமலிங்கம், தாசில்தார் காமராஜ், சேத்தியாதோப்பு டி.எஸ்.பி., ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர். விவசாயிகள் சங்க நிர்வாகிகள் சிட்டிபாபு,தேவதாஸ், ஆதிமூலம், மகா ராஜன், வேல்முருகன் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில் ஆலை அதிகாரிகள் தனியார் ஆலைக்கு ஆதரவாக செயல்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
தனியார் ஆலைக்கு கரும்பு வெட்டி அனுப்ப அனுமதி பெற்ற 18 விவசாயிகள் கோர்ட்டில் தடையாணை பெற்றிருப்பதால் இந்த பிரச்னையில் தலையிட முடியாது என தனி அலுவலர் கூறினார். இதனால் விவசாய சங்க நிர்வாகிகள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். மாலை 6.30 மணிக்கு ஆர்.டி.ஓ., ராமலிங்கம், டி.எஸ்.பி., ராமச்சந்திரன் ஆகியோர் அழைத்ததின் பேரில் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. அதில், ஒரு வாரத்தில் விவசாய சங்கங்களின் கோரிக்கைகளை கோர்ட் உத்தரவிற்கு உட்பட்டு நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதனையேற்று விவசாய சங்க நிர்வாகிகள் தங்களது மறியல் போராட்டத்தை தற்காலிகமாக விளக்கி கொள்வதாக அறிவித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக