மூடப்பட்டு இருக்கும் சிதம்பரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு.
சிதம்பரம்:
சிதம்பரம் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு மூடப்பட்ட நிலையில் உள்ளது. இதனால் விபத்தில் அடிபட்டு வருபவர்கள் கடலூர் மற்றும் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து அனுப்பி வைக்கப்படுகின்றனர். உடனடி சிகிச்சை இல்லாததால் கடலூர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே பலர் இறந்துவிடும் நிலை உள்ளது. சிதம்பரம் அரசு மருத்துவமனை 1970-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புற நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். 200-க்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் உள்ளனர்.
இம்மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி உள்ளனர். தற்போது மருத்துவமனையில் 12 டாக்டர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களில் பாதி பேர் மாற்றுப் பணிக்கு சென்று விடுதால் குறிப்பிட்ட 4 டாக்டர்களே தொடர்ந்து பணியாற்ற வேண்டிய நிலை உள்ளது.மயக்க மருந்து டாக்டர், எலும்பு முறிவு டாக்டர் ஆகியோர் இல்லாததால் 20.9.2009-ல் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்பட்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு மூடப்பட்ட நிலையில் உள்ளது. ஆண் மற்றும் பெண் மருத்துவ உதவியாளர்கள் போதிய அளவில் இல்லை. தற்போது ஒரு உதவியாளர் மட்டுமே பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வருகிற ஏப்ரல் மாதம் கூடுதல் பணியாளர்கள் மற்றும் டாக்டர்கள் நியமனம் செய்யப்படவுள்ளனர் என முதன்மை மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக