உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 06, 2010

15-ம் தேதி முதல் 45 நாள்கள் விசைப்படகுகள் மீன்பிடிக்கத் தடை

 கடலூர்:

                    வரும் 15-ம் தேதி முதல் 45 நாள்களுக்கு விசைப் படகுகள், கடலில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது. கடலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இந்தத் தடை அமுலில் இருக்கும். சென்னை, கடலூர், நாகை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 14 மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான குடும்பங்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு உள்ளன. கடல்தான் இவர்களின் வாழ்வாதாரம். ஆயிரக்கணக்கான விசைப் படகுகள், சிறிய படகுகள், கட்டுமரங்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றன.  பெரிய படகுகள் சுருக்கு வலை, இரட்டைமடி வலை, கொல்லிமடி வலை உள்ளிட்ட பல்வேறு வகையான மீன் வலைகளைப் பயன்படுத்துகின்றன. இதனால் சிறிய மீன்கள் முதல் பெரிய மீன்கள் வரை, பெருமளவுக்கு மீன்கள் பிடிக்கப்பட்டு விடுகின்றன. எனவே கடல் மீன் வளம் தொடர்ந்து பாதுகாக்கப்படவும், மீனவர்களுக்கு பரவலாக பல மாதங்கள் மீன் கிடைக்கவும், ஏப்ரல் 15-ம் தேதி முதல் 15 நாள்கள் விசைப் படகுகள் மீன்பிடிக்க அரசு தடை விதிக்கிறது.  

                 மேலும் ஏப்ரல், மே மாதங்கள்தான் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலங்கள் என்று கூறப்படுகிறது. இந்த நாள்களில் உற்பத்தியாகும் மீன் குஞ்சுகளையும் பிடித்து விட்டால், மற்ற நாள்களில் மீன்கள் கிடைப்பது அரிதாகிவிடும் என்று கருதப்படுவதால் மேற்கண்ட நாள்களில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது. ஆனால் சிறிய படகுகள் மற்றும் கட்டுமரங்களுக்குத் தடையில்லை.  கடந்த 7 ஆண்டுகளாக இந்தத் தடை விதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு மீனவர்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு அளித்து வருகிறார்கள். மீன்பிடித் தடைக் காலத்தில் பாதிக்கப்படும் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மீன்பிடி தடைக் காலத்தில் குடும்பத்துக்கு ரூ.500 வீதம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. இந்த நிவாரணத் தொகையை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று, தமிழ்நாடு மீனவர் பேரவையின் கடலூர் மாவட்டத் தலைவர் சுப்புராயன் அரசுக்குக் கோரிக்கை விடுத்து உள்ளார். 

தமிழ்நாடு மீனவர் பேரவையின் கடலூர் மாவட்டத் தலைவர் சுப்புராயன் கூறியது:  

                கடலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை சென்ற ஆண்டு முழுவதும் மீன்கள் சரியாகக் கிடைக்கவில்லை. கரையோரப் பகுதிகளில்தான் மீன்கள் அதிகம் உற்பத்தி ஆகின்றன. ஆனால் கடற்கரைகளில் பெருகிவரும் ரசாயனத் தொழிற்சாலைகளால், கடலில் பெருமளவுக்கு கழிவுகள் கலக்கின்றன. இதனால் மீன்வளம் பாதிக்கப்படுகிறது. மீன்கள் கிடைப்பது அரிதாகி, மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்றார் சுப்புராயன்.


downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior