உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 06, 2010

என்.எல்.சி. 2-ம் சுரங்க விரிவாக்கம் நாட்டுக்கு அர்ப்பணிப்பு: உன்னத பணியாற்றும் ஊழியர்களுக்கு ரூ.3 ஆயிரம் வெகுமதி- மத்திய அமைச்சர் ஜெய்ஸ்வால்



என்எல்சி 2-ம் சுரங்க விரிவாக்கத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார் மத்திய நிலக்கரித் துறை இணையமைச்சர் ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால்(இடமிருந்து 3-வது).
 
நெய்வேலி:
 
                      நாட்டு மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக விளங்கும் மின்சாரத்தை, உற்பத்தி செய்து மக்களுக்கு விநியோகித்து வரும் உன்னதமான பணியில் ஈடுபட்டுள்ள என்எல்சி ஊழியர்களுக்கு வெகுமதியாக ரூ.3 ஆயிரமும், ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ரூ.1500 வழங்கப்படும் என மத்திய நிலக்கரித்துறை இணை அமைச்சர் பிரகாஷ் ஜெய்ஸ்வால் நெய்வேலியில் திங்கள்கிழமை நடந்த விழாவில் அறிவித்தார். என்எல்சி 2-ம் சுரங்கத்தின் தற்போதைய உற்பத்தித் திறனான ஆண்டுக்கு 105 லட்சம் டன் பழுப்பு நிலக்கரி என்பதை 150 லட்சம் டன்னாக உயர்த்தும் நோக்கில் ரூ.2,295 கோடி செலவில் 2-ம் சுரங்க விரிவாக்கப் பணிகள் கடந்த 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்பணிகள் முடிந்து 2-ம் சுரங்க விரிவாக்கத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவில் நிறுவனத் தலைவர் ஏ.ஆர்.அன்சாரி வரவேற்றார். 
 
                   மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால் சுரங்கத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்துப் பேசியது:தென்னிந்தியா மட்டுமின்றி தமிழகத்தின் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்யும் உன்னதமான பணியில் என்எல்சி நிறுவனம் ஈடுபட்டுள்ளது. சுரங்கம் மற்றும் அனல்மின் நிலையம் அமைக்கும் போது சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிறது. இருப்பினும் தற்போதைய நவீன தொழில்நுட்ப உதவியுடன் சுற்றுச்சூழல் மாசு முழுவதும் தடுக்கும் வகையில் பசுமை புரட்சியையும் என்எல்சி செய்து வருகிறது. மற்ற தொழில் நிறுவனங்களுக்கு முன்மாதிரியாக என்.எல்.சி. நிறுவனம் திகழ்கிறது.நாட்டின் மின்சாரத் தேவை எந்த அளவுக்கு உள்ளது என்பது உங்களுக்குத் தெரியும், அதைப் பூர்த்தி செய்வது என்பது எவ்வளவு கடினமானது என்பதும் உங்களுக்குத் தெரியும். இருப்பினும் நீங்கள் அந்த கடினமான பணியில் ஈடுபட்டு, நாட்டு மக்களின் தேவையைப் பூர்த்தி செய்கிறீர்கள். இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள என்எல்சி தொழிலாளர்களை எண்ணி பெருமைப்படுகிறேன். என்எல்சி அதிகாரிகளின் சேவை நாட்டை முன்னிலைப்படுத்துகிறது.உங்கள் கைகளில் மின்சாரம் எனும் பெரிய பாரம் சுமத்தப்பட்டுள்ளது. அந்த பாரத்தை நாட்டு மக்களின் நலன்கருதி சிரமம்பாராமல் ஏற்க பாடுபடுங்கள். தமிழகத்தைச் சேர்ந்த மக்கள் நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டுள்ளார்கள் என்றார் அமைச்சர் ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால்.இந்தி மொழியில் அமைச்சர் பேசியதை எம்பி ஜே.எம்.ஆரூண்ரஷீத் தமிழாக்கம் செய்தார்.விழாவில் கடலூர் எம்.பி. கே.எஸ்.அழகிரி, நிலக்கரித் துறை செயலர் சி.பாலகிருஷ்ணன், நிலக்கரித் துறை நுகர்வோர் குழு உறுப்பினர் சி.டி.மெய்யப்பன், சாகுல், ஜெயப்பிரகாஷ் மற்றும் நிறுவன இயக்குநர்கள் கலந்துகொண்டனர்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior