கடலூர்:
கடலூரில் திங்கள்கிழமை நடந்த மக்கள் குறைகேட்கும் கூட்டத்தில், பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வழங்கினார். மக்கள் குறைகேட்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் உள்ள மக்கள் சேவை மையத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்தது. குடிநீர் வசதி, சாலை வசதி, வீட்டுமனைப் பட்டா, பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 296 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். மாற்றுத் திறனாளிகள் துறை சார்பில் 15 பேருக்கு மூக்குக் கண்ணாடிகள் மற்றும் ஊன்று கோல்கள், 128 பேருக்கு இலவச பயண அட்டைகள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். தாட்கோ திட்டத்தில் 38 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் கடன் உதவிக்கான காசோலைகள், பிற்பட்டோர் நலத்துறை மூலம் 5 பேருக்கு ரூ.13,230 மதிப்பிலான தையல் இயந்திரங்கள், மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் சார்பில் 4 பேருக்கு மூக்குக் கண்ணாடிகள் ஆகியவற்றையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன், தாட்கோ நிறுவன மாவட்ட மேலாளர் துளசிதாசன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் துறை அலுவலர் சீனிவாசன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பொ.முத்தையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
downlaod this page as pdf