உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 06, 2010

வருவாய்த்துறையினரின் பணிகள் கட்டாய திணிப்பு: கலெக்டரிடம் முறையிட சர்வேயர்கள் முடிவு


கடலூர்: 

                  வருவாய்த் துறையினரின் பணிகளை நில அளவைத் துறையில் திணிக்கப்படுவதால் பட்டா மாற்றும் பணி பாதிக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு விவசாய கடன்களை தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, மீண்டும் கடன் வழங்குவதில் அரசு கடுமையான கிடுக்கிப்பிடிகளை போட்டுள்ளது. ஏற்கனவே வி.ஏ.ஓ., விடம் சிட்டா கொடுத்து கடன் பெறுவது போன்று அல்லாமல், விவசாயிகள் பெயரில் நிலம் இருந்தால் மட்டுமே கடன் பெற முடியும் என்ற நிலை உள்ளது. தன் காரணமாக கூட்டுறவு சங்கங்களில் கடன் பெறுபவர்கள் 50 சதவீதமாக குறைந்து விட்டனர். இதனால் விவசாயிகள் தங்கள் மூதாதையர்களின் சொத்தை போதிய ஆவணம் கொடுத்து, தமது பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய முயன்று வருகின்றனர். இதன் காரணமாக ஏழை எளிய மக்கள் குறைதீர்க்கும் நாளில் கொடுக்கப்படும் மனுக்கள் பெரும்பாலானவை பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டிய மனுக்களாகவே உள்ளன.

                     தமிழகத்தில் கடந்த 1.12.1982ல் 4,000 பேர் சர்வேயர்களாக பணியமர்த்தப்பட்டனர். அவர்களில் பலர் ஓய்வு பெறுதல், இறப்பு போன்றவற்றால் 2,000 பேராக குறைந்து விட்டனர். நாளொன்றுக்கு ஒரு தாலுகாவிற்கு பட்டா மாற்றம் செய்ய 20 மனுக்கள் வருகின்றன. அவற்றை அளவை செய்து பட்டா மாற்றுவது என்பது திடுதிப்பென செய்துவிட முடியாது. நன்கு பயிற்சி பெற்ற சர்வேயர்களால் ஒரு நாளைக்கு 2 மனுக்கள் மட்டுமே பைசல் செய்ய முடியும். மீதியுள்ள மனுக்களை நிலுவையில் வைக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இது ஒரு புறமிருக்க, நில அளவையர்கள் வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டில் பணி செய்து வருவதால், வருவாய்த் துறையினர் செய்ய வேண்டிய பணிகள் அனைத்தும் சர்வேயர்களிடம் திணிக்கப்படுகிறது. நில அளவை தொடர்பான பணி இல்லாமல் ரேஷன் அட்டை விசாரணை, வாக்காளர் அடையாள அட்டை, இலவச வேட்டி சேலை, சுனாமி வீடுகள், கான்கிரீட் வீடுகள் திட்டம், மக்கள் தொகை கணக்கெடுப்பு போன்ற பணிகளில் நில அளவைத் துறையினர் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

                       இதனால் பட்டா மாற்றம் செய்யப்படவேண்டிய கோப்புகள் அலுவலகத்தில் உறங்கும் நிலை ஏற்படுகிறது. தினம்தோறும் வருவாய்த் துறையினரின் கெடுபிடியில் தவித்துக் கொண்டிருக்கும் நில அளவையர்கள் கலெக்டரை சந்தித்து முறையிட இருப்பதாக மாநில நிர்வாகி ரத்தினவடிவேலு தெரிவித்தார்.


downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior