கடலூர்:
கடலூரில் எல்.ஐ.சி. ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை ஒரு மணி நேரம் வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக 16,17 தேதிகளில் மும்பையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததைத் தொடர்ந்து, எல்.ஐ.சி. அலுவலர்களும் ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். கடலூர் எல்.ஐ.சி. அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்களும் ஊழியர்களும் பகல் 12 மணி முதல் ஒரு மணி வரை வேலைநிறுத்தம் செய்து அலுவலகத்தை விட்டு வெளியேறினர். பின்னர் அலுவலக வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத் தலைவர் சுஜாதா தலைமை வகித்தார். காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கச் செயலர் வி.சுகுமாறன் விளக்க உரை நிகழ்த்தினார்.
அவர் பேசுகையில், ரூ. 10 லட்சம் கோடி சொத்துக்களுடன் வெற்றிகரமாக செயல்படும் நிறுவனம் எல்.ஐ.சி. ஆனால் அதற்காக உழைக்கும் அலுவலர்கள் ஊழியர்களின் நியாயமான எதிர்பார்ப்பை ஊதிய உயர்வு விஷயத்தில் நிறைவேற்றத் தவறிவிட்டது எல்.ஐ.சி. நிர்வாகம்.
எல்.ஐ.சி. நிறுவனத்தின் போக்கை எதிர்த்து அடையாள வேலைநிறுத்தம் செய்கிறோம். எங்கள் எதிர்ப்பை எல்.ஐ.சி. நிர்வாகம் புறக்கணித்தால், ஜனவரி 21-ம் தேதி திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் செய்வோம் என்றார்.
எல்.ஐ.சி. முதல்நிலை அலுவலர்கள் சங்கம் சார்பில் கணபதி சுப்பிரமணியன், வளர்ச்சி அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆனந்தன், மகளிர் துணைக் குழு சார்பில் ஜெயஸ்ரீ, வேலூர் கோட்ட இணைச் செயலாளர் மணவாளன், குடியிருப்போர் சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மருதவாணன், சி.ஐ.டி.யூ. மாவட்டச் செயலாளர் ஜி.சுகுமாறன் உள்ளிட்டோர் பேசினர். செயற்குழு உறுப்பினர் கே.பி.சுகுமாறன் நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக