சிதம்பரம் :
தரமான கல்வி அளிக்க தேசிய அளவில் விவாதித்து உறுதியான கோட்பாட்டை வகுக்க வேண்டும் என பல்கலைக் கழக மானியக்குழு துணைத்தலைவர் வேத் பிரகாஷ் பேசினார்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலை பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியதாவது:நாட்டின் மக்கள் தொகையில் 42 சதவீதத்தினர் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளதாக டெண்டுல்கர் கமிட்டி ஆய்வில் தெரிவித்துள்ளது. கல்வி நிறுவனங்கள் வறுமையை ஒழிக்க முன்வர வேண்டும். உலக அளவில் 2050ம் ஆண்டு மக்கள் தொகை 9.20 பில்லியனை தொட்டுவிடும். அதற்கேற்ப உணவு மற்றும் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய நிலையில் திட்டங்களை வகுக்க வேண்டும்.உலக அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது கூட கல்வி நிலையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இருந்தும் கல்வி வளர்ச்சி பெறவில்லை. இன்றைய கல்வி நிலை பணம் சம்பாதிக்கும் வகையில் தான் மாணவர்களுக்கு போதிக்கப்படுகிறது. அவர்களின் அறிவு திறமையை வளர்க்கும் நிலைக்கு கல்வி மாற்ற வேண்டும்.
ஒழுக்கவியல் கல்வி போதிக்க வேண் டும். அப்போது தான் கல்வியை தரமானதாக்க முடியும்.பதினோராம் ஐந்தாண்டு திட்டத்தில் கல்வி வளர்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதனை முறையாக பயன்படுத்தி கல்வி வளர்ச்சியை பெருக்கவும், மாணவர்களை கல்வியில் திறமையானவர் களாக மாற்ற கல்வி நிறுவனங்கள் திட்டமிட வேண்டும். தரமான கல்வி அளிக்க தேசிய அளவில் விவாதித்து உறுதியான கோட்பாட்டை வகுக்க வேண்டும்.அரசியல் ரீதியாகவும் இப் பணியை செய்ய வேண்டும். போதுமான அளவில் கல்வி உபகரணங்களுடன் கூடிய அறிவியல் ஆய்வு கூடங்களும், திறமையான ஆசிரியர்களும் நியமித்தால் மாணவர்களின் கல்வி திற�மையை வளர்க்க முடியும். இதில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பணி பெருமைப்படக்கூடிய வகையில் உள்ளது.
போட்டிகள் நிறைந்த உலகில் கல்வி நிறுவனங்களும் கல்வி வளர்ச்சியை மேம்படுத்துவதில் போட்டி போட வேண்டும். அப்போது தான் ஆரோக்கியமான கல்வி கொடுக்க முடியும்.முதல் மற்றும் இரண்டாவது உலக போர் முடிந்தபோது, நாட்டில் ஒவ்வொருவருக்கும் கல்வி கற்கும் உரிமை உண்டு என்றும், தொடக்க கல்வி கட்டாயமாகவும், இலவசமாகவும் கிடைக்க வேண்டும் என்றும், தொழில்நுட்ப கல்வி அளிக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டன. ஆனால் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இதனை கடைபிடிக்கவில்லை. கல்வி சமத்துவம், சமுதாய நீதி போன்ற கொள்கைகளை நாம் விட்டுவிட்டோம்.முன்னேறிய நாடுகளை ஒப்பிடும்போது நமது நாடு கல்வி தரத்தில் பின்தங்கியே உள்ளது. இந்தியாவில் 483 பல்கலைக் கழகங்களும், 20,786 கல்லூரிகளும் இருந்த போதிலும், 12 சதவீதத்தினர் மட்டுமே உயர் கல்வி பயில்கின்றனர்.
ஆனால் வளர்ந்த நாடுகளில் 27 சதவீதத்தில் இருந்து 47 சதவீதம் பேர் உயர்கல்வி பயில்கின்றனர்.தமிழகத்தில் கடலூர், விழுப் புரம், தர்மபுரி மாவட்டங்கள் கல்வி முன்னேற்றம் குறைவாகவே உள்ளது. ஆரம்ப கல்வி முதல் உயர்கல்வி வரை சமூக மாற்றத்திற்கேற்ப பாட திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும்.இன்று பட்டம் பெறும் மாணவர்கள், பட்டம் பெற்றுவிட்டோம், படிப்பு போதும் என நிறுத்திவிடக்கூடாது. வாழ்நாள் முழுவதும் கல்வி கற்க வேண் டும் என சபதம் ஏற்க வேண்டும். போராட்டம் நிறைந்த வாழ்க்கையை சந்திக்க கல்வி மூலம் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். முடியாது என எதையும் விட்டுவிடக்கூடாது. கல்வியாளர்கள் ஆலோசனையை பெற வேண் டும். மாணவர்களுக்கு நேர மேலாண்மை அவசியம் தேவை. அறியாமையை மறைக்க முயற்சிக்காதீர்கள். இவ்வாறு வேத் பிரகாஷ் பேசினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக