கடலூர் :
தேர்வின் போது முறைகேடுகள் நடப்பதாக வந்த "அனாமதேய' கடிதத்தால், பறக்கும் படையினர் 30 பேர், ஒரே பள்ளியில் குவிந்து அதிரடி சோதனை நடத்தினர்.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலில் உள்ள பருவதராஜ குருகுலம் மேல்நிலைப் பள்ளி, பொதுத் தேர்வில் ஒவ்வொரு ஆண்டும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகிறது. இப் பள்ளியில் தேர்வு நேரங்களில் முறைகேடு நடப்பதாக கல்வி இயக்குனர் அலுவலகத்திற்கு, "அனாமதேய' கடிதம் வந்துள்ளது. பள்ளிக் கல்வி இயக்குனரக அலுவலக உத்தரவின்படி, இணை இயக்குனர் தலைமையில், நான்கு பறக்கும் படை உறுப்பினர்கள், மண்டல துணை இயக்குனர், சி.இ.ஓ., விருத்தாசலம் டி.இ.ஓ., ஆகியோர் தலைமையில் தலா நான்கு உறுப்பினர்கள், நிலையான பறக்கும் படை உறுப்பினர்கள் நான்கு பேர், ரெகுலர் பறக்கும் படையினர் மட்டுமின்றி அண்ணா பல்கலைக் கழக பார்வையாளர் குழுவைச் சேர்ந்த இரண்டு பேர் என 30 பேர், நேற்று இயற்பியல் பாடத் தேர்வின் போது அடுத்தடுத்து சென்று சோதனை மேற்கொண்டனர். இதில், ரெகுலர் மாணவ, மாணவியர் ஒருவரும் பிடிபடவில்லை. தனித் தேர்வர்கள் மட்டுமே 10 பேர் பிடிபட்டனர். இதனால் மாணவ, மாணவியர் தேர்வு எழுத முடியாமல் தவித்தனர். இதையறிந்த பெற்றோர், தேர்வின் போது ஒவ்வொரு குழுவாக சென்று சோதனை செய்ததால், அமைதியான முறையில் தேர்வு எழுத முடியாமல் தங்கள் பிள்ளைகள் மன உளைச்சலுக்கு ஆளாகியதாக தேர்வுத் துறை அதிகாரிகள் மீது அதிருப்தியில் உள்ளனர். "அனாமதேய' கடிதத்தால் சோதனை என்ற பெயரில் மாணவ, மாணவியரை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய தேர்வுத் துறைக்கு கண்டனம் தெரிவிக்க முடிவு செய்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக