நெய்வேலி :
நெய்வேலி செயின்ட் பால் மெட்ரிக் பள்ளி நிர்வாகம் 6வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்தாதைக் கண்டித்து ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெய்வேலி டவுன்ஷிப் செயின்ட் பால் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் 6வது ஊதியக்குழுவின் பரிந்துரைபடி ஊதியம் வழங்கக்கோரி கடந்த மாதம் 4ம் தேதி ஆசிரியர்கள் பணி புறக்கணித்தனர். ஆசிரியர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர். அதனால் பள்ளி நிர்வாகம் இரண்டு நாள் விடுமுறை அறிவித்தது. பிப். 10ம் தேதி பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்ற முத்தரப்பு பேச்சவார்த்தை நடத்தப்பட்டது. தமிழக அரசு அறிவிக்கும் அகவிலைப்படியை அதே கால கட்டத்தில் வழங்க வேண்டுமென்ற ஆசிரியர்களின் கோரிக்கையை நிர்வாகத்தின் மேல்மட்டத்தில் பரிசீலித்து 10 நாளில் அறிவிப்பதாக பள்ளி நிர்வாகம் அறிவித்தது. ஆனால் 15 நாள் கடந்த பின்னரும் அறிவிக்காததால், ஆசிரியர் சங்கத்தினர் பள்ளி முதல்வரை அணுகியபோது மார்ச் 1ம் தேதி மாலை அகவிலைப்படி தொடர்பான அறிவிப்பினை வெளியிட குழு வருவதாக கூறினார். அதன் பிறகும் குழுவும் வரவில்லை. பள்ளி முதல்வரும் விடுப்பில் சென்றுவிட்டார். பிப்ரவரி மாத ஊதியம் இதுவரை வழங்கவில்லை. இந்நிலையில் கடந்த 7ம் தேதி தொ.மு.ச., தலைவர் வீர ராமச்சந்திரன், பா.தொ.ச., செயலாளர் திலகர், சி.ஐ.டி.யூ., தலைவர் குப்புசாமி, பொது செயலாளர் வேல்முருகன், எஸ்.சி., எஸ்.டி., சங்க பொருளாளர் பாலாஜி, கிறிஸ்தவ சமூக நீதி பேரவை வல்லபதாஸ் மற்றும் ஆசிரியர் சங்கத்தினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் எடுத்த முடிவின்படி ஆசிரியர் சங்கத்தினர் நேற்று முதல் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக