உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 11, 2010

பள்ளி ஆண்டு விழாக்களில் சினிமா பாடல்களை தடை செய்ய வேண்டும் : படிப்பில் நாட்டம் குறைவதாக பெற்றோர்கள் கவலை

விருத்தாசலம் : 

                   பள்ளிகளில் நடைபெறும் ஆண்டு விழாக்களில் சினிமா பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் மாணவர்களுக்கு படிப்பில் நாட்டம் குறைவதாக பெற்றோர்கள் கவலை அடைகின்றனர். இதனை தடுக்க பள்ளிகளுக்கு, கல்வி துறை உரிய அறிவுரை வழங்க வேண்டும்.
 
                தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் அனைத்து வகுப்புகளுக்கும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஆண்டு இறுதி தேர்வுகள் முடிந்து மே மாதம் கோடைவிடுமுறை விடப்பட உள்ளது. விடுமுறைக்கு முன் மாணவர்களை ஊக்குவித்திட சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டு விழாக்கள் நடத்தப்படுகிறது. பள்ளி ஆண்டு விழாக்களில் முதலில் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் பள்ளியின் ஆண்டறிக்கை எனப்படும் செயல்திட்டங்கள் வாசிக்கப்படும். பின்னர் மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பேச்சு, கவிதை, கட்டுரை, விளையாட்டு மற்றும் தனி நடிப்பு உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்படும். அதனையடுத்து மாணவ - மாணவிகள் பங்குபெறும் நாடகங்கள், கலை நிகழ்ச்சிகள் நடக்கும்.
 
               கடந்த காலங்களில் பள்ளி ஆண்டு விழா கலை நிகழ்ச்சிகளில் நாட்டின் வரலாற்றை நினைவு கூறும் நாடகங்கள், மாணவர்களின் அறிவை, சிந்தனைகளை அதிகரிக்க செய்யும் நிகழ்ச்சிகள், நாட்டின் முக்கிய தலைவர்கள் போல் வேடமணிந்து அவர்களது கருத்துகளை சக மாணவர்களுக்கு கூறுவது போன்ற மாணவ சமுதாய வளர்ச்சிக்கு உகந்த நிகழ்ச்சிகளே நடந்து வந்தது. மேலும் மாணவர்களை மகிழ்விக்கும் விதத்திலும், கலாசாரத்தை நினைவு கூறும் வகையிலும், சமூக விழிப்புணர்வு ஊட்டும் வகையிலும் கிராமியபாடல்கள், வில்லுபாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதுபோன்ற திறன்களை வெளிப்படுத்த ஆசிரியர்களும், பெற்றோர்களும் மாணவர்களுக்கு பலவகைகளில் ஊக்குவித்து வந்தனர். காலப்போக்கில் பள்ளி ஆண்டு விழாக்களில் சினிமா பாடல்கள் மெல்ல மெல்ல ஊடுருவ தொடங்கியது. தொடக்கத்தில் சினிமா பாடல்களை மைக்குகள் பிடித்து பாடி வந்த மாணவர்கள் பின்னர் பாடலுக்கு டான்ஸ் ஆடத் தொடங்கினர்.
 
                இதன் உச்சகட்டமாக தற்போது தெருக்களில் நடக்கும் ரெக்கார்டுடான்ஸ் நிகழ்ச்சி போல் டேப் ரெக்கார்டரில் பாடல் ஒளிக்க அதற்கு மாணவ- மாணவிகள் பள்ளி மேடையில் நடனமாடி வருகின்றனர். இதற்கு தேர்வு செய்யும் பெரும்பாலான பாடல்கள் ஆபாச பாடல்களாகவும், அருவருக்கதக்க அங்க அசைவுகளுடன் கூடிய நடனங்களாகவே உள்ளன. இதுபோன்று டான்ஸ் ஆடும் மாணவர்களுக்கு பள்ளியிலே வாரக் கணக்கில் பயிற்சி அளிக்கப்படுகிறது. சில தனியார் பள்ளிகளில் சிறப்பு பயிற்சியாளர்களை அழைத்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இவ்வாறு சினிமா பாடலுக்கு ஆடும் மாணவர்களுக்கு பாடல் முடிந்ததும் சக மாணவர்கள், பெற்றோர் பாராட்டி கைதட்டும் போது சாதனையின் உச்சத்தை அடைவதாக கருதுகின்றனர். அதனால் அவர்கள் தொடர்ந்து சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளிலே தங்களது சிந்தனையை செலுத்துகின்றனர். இதனால் படிப்பதை விட்டு விட்டு "டிவி'யில் ஒளிபரப்பாகும் சினிமா நிகழ்ச்சிகளை பார்ப்பதிலேயே கவனம் செலுத்துகின்றனர்.
 
                ஆண்டு விழாக்களில் அறிவு சார்ந்த நிகழ்ச்சிகள் குறைந்து, சினிமா நிகழ்சிகளுக்கு பள்ளிகள் முக்கியத்துவம் கொடுப்பதால் மாணவர்களுக்கு சினிமா மோகம் அதிகரித்து படிப்பு பாதிப்பதாக பெற்றோர்கள் கவலையடைகின்றனர். பள்ளிகளில் சினிமா நிகழ்ச்சிகள் நடத்துவது "பிஞ்சு நெஞ்சில் நஞ்சை கலப்பது' போலகும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். மாணவர்களின் எதிர்காலம் கருதியும், பெற்றோர்களின் கருத்தை ஏற்கும் விதத்திலும் பள்ளி ஆண்டு விழாக்களில் சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளை தவிர்க்க பள்ளிகள் தாமாக முன் வர வேண்டும். அதற்கு கல்வித்துறை அதிகாரிகள், பள்ளிகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior