கடலூர் :
பராமரிப்பு பணிக்காக நேற்று கடலூரில் காலை முதல் மாலை வரை மின் நிறுத்தம் செய்ததால் அரசு அலுவலகங்களில் பணிகள் முற்றிலுமாக பாதித்தது.
மின்சாரம் பற்றாக்குறையை சமாளிக்கும் பொருட்டு மின் வாரியம் சென்னை தவிர்த்து மாநிலத்தில் அனைத்து பகுதிகளிலும் சுழற்சி முறையில் தினசரி மூன்று மணி நேரம் மின் நிறுத்தம் செய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுகிறது. கடலூர் மாவட்டத்தில் இரண்டு மாதங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பகல் நேரங்களில் மின்சாரமின்றி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மின்தடை காரணமாக அரசு அலுவலகங்களில் பணிகள் தேக்கமடைகிறது. அரசு அலுவலகங்களில் போதிய இடப் பற்றாக் குறையினால் ஏற்கனவே புழுக்கத்தில் ஊழியர்கள் வேலை செய்து வரும் நிலையில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து அனல் காற்று வீசி வருவதால் ஊழியர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் பெரும் பாலான அரசு அலுவலகங்கள் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ள நிலையில் மூன்று மணி நேரம் மின்தடையால் கம்ப்யூட்டர், ஜெராக்ஸ் மற்றும் பேக்ஸ் போன்ற கருவிகளை இயக்க முடியாததால் அரசு அலுவலகங்களில் அன்றாட பணிகள் தடைபடுகிறது. இதன் காரணமாக அரசு ஊழியர்கள் அலுவலகங்களில் அமர்ந்து வேலை பார்க்க முடியாமல் காற்றோட்டமாக அலுவலகத்தை விட்டு வெளியேறி விடுகின்றனர். இதனால் மின் தடை நேரங்களில் பெரும் பாலான அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றது.
இந்நிலையில் கடலூர் கேப்பர் மலை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக நேற்று மின் நிறுத்தம் செய்யப்பட்டது. இதன் காரணமாக வண்டிப்பாளையம், பாதிரிக்குப்பம், கூத்தப்பாக்கம், கடலூர் முதுநகர், துறைமுகம், தேவனாம்பட்டினம், புதுப்பாளையம், பீச்ரோடு, வன்னியர்பாளையம், வண்ணாரப்பாளையம் பகுதிகளில் நேற்று காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை மின் நிறுத்தம் செய்யப் பட்டது. மாவட்டத்தின் பிரதான அலுவலகமான கலெக்டர் அலுவலகம், வேளாண் துறை அலுவலகம், தாலுகா அலுவலகம், கால் நடை துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, பேரூராட்சி இயக்குனர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்களில் மின் தடை காரணமாக நேற்று பணிகள் முற்றிலுமாக பாதித்தது. நேற்று காலை 11 மணி முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அலுவலகங்களில் புழுக்கத்தில் உட் கார முடியாமல் அருகில் உள்ள மரத்தடியில் தஞ்சமடைந்தனர். இதனால் பெரும்பாலான அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
இதனை அறியாமல் நேற்று பல்வேறு பணி காரணமாக கிராமங்களில் இருந்து வந்த மக்கள் அரசு அலுவலகங்கள் முன் காலை முதல் மாலை வரை காத்திருந்தும் தங் களது பணியை முடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதுபோன்ற சம்பவங்களை தவிர்த்திட மக்கள் அதிகம் வந்து செல்லும் பிரதான அலுவலகங்கள் உள்ள பகுதிகளில் மின் தடை நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும். அதேபோன்று பரமரிப்பு பணிக்காக ஒரு நாள் முழுவதும் மின்சாரம் நிறுத்துவதையும் விடுமுறை தினங்களில் செய் தால் அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்காது. அதேநேரத்தில் வெகு தொலைவில் இருந்து வரும் கிராம மக்களும் தங்களது பணிகளை எளிதாக முடித்துக் கொண்டு செல்ல முடியும். இதற்கு மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய
0 கருத்துகள்:
கருத்துரையிடுக