உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 29, 2010

சீனித்துளசி பயிரிடலாம்; லாபம் பெறலாம்

 சிதம்பரம்:

                இயற்கையின் பலவிதமான அற்புதங்களில் சீனித்துளசி தாவரம் மிகவும் முக்கியமான மருத்துவ தாவரமாக திகழ்கிறது. சீனித்துளசி கரும்பு சர்க்கரையை விட 30 மடங்கு அதிகமாக இனிப்புச் சுவையை கொண்டிருந்தாலும், சர்க்கரை நோயாளிகளுக்கு மருந்தாக பயன்படுவது ஆச்சரியமளிக்கிறது. நீரிழிவு நோயாளிகள் சர்க்கரையை உபயோகிக்க முடியாத நிலையில் இந்த சீனித்துளசியிலிருந்து பெறப்படும் சர்க்கரையை உபயோகிக்கலாம். இத்தகைய சீனித்துளசியை விவசாயிகள் வளர்த்தால் தங்களது முதலீட்டைப் போல இருமடங்கு வருமானம் தரக்கூடியதாகும். ஸ்டீவியா எனப்படும் இந்த சிறுசெடி பராகுவே நாட்டைச் சேர்ந்ததாக இருந்தாலும் உலக நாடுகள் பலவற்றிலும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.  தமிழக விவசாயிகள் சீனித்துளசியை விவசாய நிலங்களிலும், வீட்டுத் தோட்டங்களிலும் எளிதாக குறைந்த செலவில் வளர்த்து அதிகளவு லாபம் பெறலாம்.

சாகுபடி குறிப்புகள்: 

              சீனித்துளசி பயிரிடுவதற்கு ஒப்பந்த சாகுபடி முறை மிகவும் பாதுகாப்பானதாகும். சீனித்துளசி ஒரு மித வெப்பமண்டல பயிராகும். நல்ல வடிகால் வசதியுள்ள செம்மண்ணில் நன்றாக வளரும் தன்மை கொண்டது. உவர்ப்பு தன்மை தாங்கி வளரும் தன்மை இல்லாததால், தண்ணீர் தேங்கியுள்ள விவசாய நிலங்களில், போதிய வடிகால் வசதி இல்லாத நிலங்களில் சீனித்துளசியை சாகுபடி செய்ய முடியாது.விவசாயிகள் நிலத்தை தேர்வு செய்த பின்பு நன்றாக உழுது ஏக்கருக்கு 20 டன்கள் வரை தொழுஉரம் இட்டு மீண்டும் ஒருமுறை நன்றாக உழவும் பணிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். மேட்டு பாத்திகளில் 23-20 செ.மீ. இடைவெளியில் நடவு செய்யும்போது ஒரு ஏக்கருக்கு 44 ஆயிரம் செடிகள் வரை தேவைப்படும். பொதுவாக சீனித்துளசி தண்டுக்குச்சிகள் மூலம் இனம்பெருக்கம் செய்யப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு 24:12:18 கிலோ என்ற அளவில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து இடுதல் வேண்டும். அடியுரமாக பாதியளவும், தழைச்சத்தையும், முழு அளவு மணி மற்றும் சாம்பல் சத்துகளை பயிருக்கு தர வேண்டும். பின்னர் முதல் அறுவடைக்கு பிந்தைய காலக்கட்டத்தில் மீதிபாதி தழைச்சத்தை நுண்ணூட்ட சத்துக்களான போரான் மற்றும் மாங்கனீசு ஆகியவற்றை சேர்த்து வழங்க வேண்டியது அவசியம். சீனித்துளசியின் மகசூலை அதிகரிக்க முதல் களையெடுத்தல் பணிகளை நடவு செய்த ஒரு மாதத்துக்குப் பின்பும், அதன் பின் 20 நாள்களுக்கு ஒரு முறையும் களை நீக்கம் செய்வது பயிரின் வளர்ச்சிக்கு நன்மை தரும்.

                    சீனித்துளசி இலைகளில் ஸ்டீவியோசைடு வேதிப்பொருள் அதிகளவு காணப்படுகிறது. செடிகள் அதிகமாக பூப்பூக்கும் வரை ஸ்டீவியோசைடு இலைகளில் அதிகமாக காணப்படும்.  இலைகளின் வளர்ச்சியை பெருக்க நடவு செய்த பின் 30, 45, 60, 75 மற்றும் 85 நாள்களிலும் மற்றும் அறுவடையின் போது பூக்களை அகற்றிவிடுவது அவசியம்.சீனித்துளசியை அதிகமாக நோய் மற்றும் பூச்சிகள் தாக்குவது கிடையாது. சீனித்துளசியை நடவு செய்த 4,5 மாதங்களில் அறுவடைக்கு தயாராகிவிடும். அடுத்தடுத்த அறுவடைகளை 3 மாதங்களுக்கு ஒருமுறை என்று 3 ஆண்டுகள் வரை தொடர்ந்து அறுவடை செய்து லாபம் பெறலாம். அறுவடையின்போது அடிபாகத்திலிருந்து 10 செ.மீ. உயரம் வரை விட்டுவிட்டு மேல்பகுதியை வெட்டி எடுக்க வேண்டும். இதன் பிறகு வரும் இலைகள் 3 மாதங்களில் அறுவடைக்கு தயாராகிவிடும். ஏக்கருக்கு ஒரு அறுவடையில் 1 முதல் 1.2 டன்கள் வரை உலர் இலைகளை அறுவடை செய்யலாம். ஆண்டுக்கு 4.48 டன் வரை உலர் இலைகள் கிடைக்கும்.வணிக வாய்ப்புகள்: சீனித்துளசி முதல் ஆண்டில் ஒரு ஏக்கருக்கு ஒன்றரை லட்சம் ரூபாயும், அடுத்த ஆண்டுகளில் குறைந்த செலவில் ரூ.2 லட்சம் வரையும் வருமானத்தை பெற்றுத்தரும். 

                     தற்போது உள்நாட்டு சந்தையில் சர்க்கரைக்கு நல்ல மாற்றாக உள்ள சீனித்துளசி விலை போகிறது. சீனித்துளசி இலைகளை உலர வைத்து பொடி செய்து இனிப்பு வகைகள், குளிர்பானங்கள், பழச்சாறுகள், ஊறுகாய்கள், ஜாம் ஆகிய பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டு நுகர்வு சந்தைகளில் அதிகளவு விற்பனை செய்யப்படுகிறது. எனவே தமிழக விவசாயிகள் தொடர்ச்சியாக பல ஆண்டுகள் அதிக லாபம் தரும் சீனித்துளசி சாகுபடியில் ஈடுபட்டு வாழ்வில் வளம் பெறலாம் என்கிறார் அண்ணாமலைப் பல்கலை. வேளாண் பொருளாதாரத்துறை முனைவர் கே.ஆர். சுந்தரவரதராஜன்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior