மறுகூட்டல் மற்றும் விடைத்தாள்களின் நகலைப் பெறுவதற்கான விண்ணப்பங்களை வாங்க திங்கள்கிழமை நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வித் துறை வளாகத்தில் நீண்ட வரிசையில் நிற்கும் மாணவர்கள்.
கலை, அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு மாணவர்கள் அதிக ஆர்வம் செலுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்குச் சான்றாக சென்னையில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பங்களைப் பெற ஏராளமான மாணவர்கள் திங்கள்கிழமை வரிசையில் காத்திருந்தனர்.
பிளஸ் 2 தேர்வில் ஆண்டுதோறும் தேர்ச்சி பெறும் மாணவர்களில், பொறியியல் படிப்பில் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமானோரும், மருத்துவம், பல் மருத்துவம், கால்நடை மருத்துவ அறிவியல், வேளாண்மை, சட்டம் போன்ற தொழில் படிப்புகளில் சில ஆயிரம் மாணவர்களும் சேருகின்றனர். ஆனால், கலை, அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கைதான் மிகவும் அதிகம். தமிழகம் முழுவதும் 2009-10-ம் ஆண்டு கணக்குப்படி, 62 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 46,386 இடங்கள், 133 அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 97,652 இடங்கள், 383 சுயநிதி கல்லூரிகளில் 1,08,637 இடங்கள், 9 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் 3,563 இடங்கள் என 578 கல்லூரிகளில் 2,56,238 இடங்கள் உள்ளன. இவற்றில் 2,17,329 இடங்கள் நிரப்பப்பட்டன. 2010-11-ம் ஆண்டிலும் அதே அளவு இடங்கள் கிடைப்பதோடு, பல கல்லூரிகளில் 10 சதவீதம் வரை கூடுதல் இடங்கள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு இவற்றில் அதிக அளவில் மாணவர் சேர்க்கை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிளஸ் 2 தேர்வு முடிவு கடந்த வெள்ளிக்கிழமை (மே 14) வெளியானது. பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு முக்கியமான கணிதம், இயற்பியல் போன்ற பாடங்களின் மதிப்பெண்ணும் வெகுவாக குறைந்துள்ளது. இதனால், பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க உள்ள மாணவர்களின் கட்-ஆப் மதிப்பெண் குறைந்துள்ளது. இதனால் மாணவர்கள் தாங்கள் விரும்பிய பொறியியல் கல்லூரி அல்லது பொறியியல் பாடப் பிரிவுகளில் சேர வாய்ப்பு இல்லாமல் போகும் என கருதப்படுகிறது. மாணவர்கள், கலை, அறிவியல் கல்லூரிகளின் பக்கம் படையெடுக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கலை கல்லூரிகளில் கடந்த ஆண்டில் 38,909 இடங்கள் மட்டுமே காலியாக இருந்தன. இவற்றில் கலை, அறிவியல் படிப்புகளில் சேர்ந்த பின்னர், பொறியியல் படிப்பு கிடைத்து அதில் சேர்ந்ததால் ஏற்பட்ட காலி இடங்களும் அடங்கும். கணித பாட மதிப்பெண் குறைவு காரணமாக இந்த ஆண்டு அவ்வாறு காலியிடங்கள் ஏற்படுவதும் குறையும் என்று கூறப்படுகிறது. தவிர, பிளஸ் 2 தேர்வில் வேதியியல், வணிகவியல், கணக்குப் பதிவியல், வணிகக் கணிதம் போன்ற பாடங்களில் மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளதோடு, கணிசமான மதிப்பெண்ணையும் பெற்றுள்ளனர். கல்வித்துறை வரலாற்றில் என்றுமே இல்லாத அளவுக்கு வணிகவியலில் இந்த ஆண்டு 968 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளனர். இதே கடந்த ஆண்டில் 285 மாணவர்கள் தான் வணிகவியலில் 100 சதவீத மதிப்பெண்ணைப் பெற்றுள்ளனர். வணிகக் கணிதத்தில் 341 மாணவர்களும் (கடந்த ஆண்டில் 198 பேர்) , கணக்குப் பதிவியலில் 851 பேரும் (கடந்த ஆண்டில் 621 பேர்) 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதனாலும், கலை, அறிவியல் கல்லூரிகளில் வழக்கமாக சேரும் மாணவர்களைவிட 2010-11-ம் ஆண்டில் மாணவர் சேர்க்கை அதிகம் இருக்கும் நிலை உருவாகியுள்ளது. மாணவர் சேர்க்கைக்காக அரசு கல்லூரிகளில் கடந்த வாரம் இறுதியில் விண்ணப்ப விற்பனை தொடங்கியது. சென்னை மாநிலக் கல்லூரியில் இதுவரை 4,000 விண்ணப்பங்களும், ராணி மேரி கல்லூரியில் 4,400 விண்ணப்பங்களும், நந்தனம் கல்லூரியில் 1,000 விண்ணப்பங்களும் விற்பனையாகியுள்ளன. விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு, அவை சமர்ப்பிக்கப்படும் கால அளவை அந்தந்தக் கல்லூரிகள் நிர்ணயித்துள்ளன. எனினும் பெரும்பாலான கல்லூரிகளில் மே 31 வரையிலும், வியாசர்பாடி அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி போன்ற சில கல்லூரிகளில் ஜூன் முதல் வாரம் வரையிலும் விண்ணப்ப விநியோகம் இருக்கும். சென்னை மாநிலக் கல்லூரி முதல்வர் கலியபெருமாள், விண்ணப்ப விற்பனை கடந்த ஆண்டைவிட அதிகம் இருக்கும். எனினும் தேவைக்கேற்ப விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் மீண்டும் அச்சடிக்கப்படும் என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக