சிதம்பரம்:
சிதம்பரம் அரசு மருத்துவமனையில் பழுதான மின் மோட்டார் சீர் செய்யப்படாததால் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தண்ணீர் இன்றி நோயாளிகள் தவித்து வருகின்றனர். அறுவை சிகிச் சைக்கு உள்ளிட்ட அவசர தேவைக்கு கூட வெளியில் இருந்து தண்ணீர் வாங்கிவர வேண்டிய அவல நிலை உள்ளது.
சிதம்பரத்தை மையமாகக் கொண்டு சுற்றுப்புறங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெறும் வகையில் காமராஜ் அரசு மருத்துவமனை உள்ளது. 34 ஆண்டுகள் பழமையான மருத்துவமனை. எக்ஸ்ரே, ரத்த வங்கி, மகப்பேறு, தோல் சிகிச்சை, பல் சிகிச்சை, கண் சிகிச்சை, நரம்பியல், எலும்பு முறிவு, சித்தா ஆகியன அனைத்து பிரிவுகளும் உள்ளது. எந்த நேரத்திலும் ஆபரேஷன் செய்யும் வகையில் ஆபரேஷன் தியேட் டர் உள்ளது. தினமும் ஆயிரத்திற்கும் மேற் பட்ட நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். மகப்பேறு மற்றும் பெண்களுக்கென 100 படுக்கை வசதிகளுடன் விஸ்தாரமான புதிய மருத்துவமனை கட்டடம், அதுதவிர அவசர சிகிச்சை பிரிவிற்கென தனி கட்டடம் கட்டப்பட்டு சமீபத்தில் திறக்கப்பட்டது. கட்டட வசதி, மருந்து சப்ளை, மருத்துவ உபகரணங்கள் என வசதிகள் இருந்தும் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகளுக்கு முழுமையான சிகிச்சை கிடைக்காத நிலை உள்ளது. சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு 22 டாக்டர்கள் நியமிக் கப்பட உள்ளதாக கூறப் பட்டாலும் இதுவரை பாற்றாக்குறைதான்.
டாக்டர் இல்லாதது ஒருபுறம் என்றாலும், நோயாளிகளுக்கு பாதுகாப்பில்லை. யார் எந்த நேரத்திலும் உள்ளே நுழைந்து குடித்துவிட்டு கூத்தடிக்கலாம். நோயாளிகள் கூட பிராந்தி வாங்கி வந்து உள்ளேயே குடித்துவிட்டு சக நோயாளிகளை மிரட் டும் சம்பவங்களும் அடிக் கடி நடக்கிறது. இதனால் இரவு நேரங்களில் நோயாளிகள் அச்சத்துடன் தங்கியுள்ளனர். இவை எல்லாவற்றையும் விட முக்கிய பிரச்சனையாக தற்போது தண் ணீர் இல்லாமல் நோயாளிகள் கடந்த ஒரு வாரத் திற்கும் மேலாக தவியாய் தவித்து வருகின்றனர். மருத்துவமனை வளாகத் தில் சுனாமி மேம்பாட்டு நிதி 3 கோடி ரூபாயில் கட்டப்பட்ட மகப்பேறு மற்றும் பெண்கள், அவசர சிகிச்சை பிரிவு கட்டடத்திற்கு தண்ணீர் சப்ளை செய்ய தனியாக குடிநீர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி உள்ளது. அந்த குடிநீர் தொட்டிக்கு சப்ளை செய்யும் மின் மோட்டார் பழுதாகி ஒரு வாரத்திற் கும் மேல் ஆகிறது.
இதுவரை மின்மோட் டாரை சீர் செய்ய யாரும் அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. பொதுப்பணித் துறையிடம் கூறியிருக்கிறோம் என மருத்துவமனை அதிகாரிகள் அலட்சியமாக பதில் கூறுகின்றனர். பொதுப்பணித்துறையினரும் அதுபற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை. நோயாளிகள் மற்றும் அவர்களுடன் தங்கியுள்ளவர்கள் குடிநீர் இன்றி மருத்துவ எதிர்புறம் உள்ள கடை மற்றும் பொது இடங்களுக்கு சென்று பாட்டிலில், தண்ணீர் பிடித்து வருகின்றனர்.
மருத்துவமனை வளாகத்திலேயே மறைவான இடத்தில் இயற்கை உபாதை கழிப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. அத்துடன் மருத்துவமனை மற்றும் கழிப்பிடம் சுத்தம் செய்யப்படாததாலும் மருத்துவமனை உள்ளே தலைகாட்ட முடியாத அளவில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோயாளிகள் படுக்கையில் இருப்பதை விட அதிக நேரம் மருத்துவமனைக்கு வெளியில் தான் நேரத்தை செலவிடுகின்றனர். நோயாளிகள் நிலைதான் இப்படி என்றால் டாக்டர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களும் அவதிப்படுகின்றனர். ஆபரேஷன் தியேட்டருக்கு கூட வெளியில் இருந்து தண்ணீர் பிடித்து வந்து பயன்படுத்துகின்றனர். முதலில் மருத்துவமனைக்கே அவசர சிகிச்சையை அரசு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக