வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம், புதுவையில் செவ்வாய்க்கிழமை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியது:
வங்கக் கடலில் சென்னையிலிருந்து 850 கி.மீ. தொலைவில் தென்கிழக்குப் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி, புயலாக உருவெடுத்துள்ளது. இந்தப் புயல் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, ஆந்திர மாநில கடல் பகுதியில் மையம் கொண்டுள்ளது. இதனால் ஆந்திரத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதன் பாதிப்பு தமிழகத்திலும் இருக்கும். பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கும் வாய்ப்பு உள்ளது. சென்னையிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றார். இந்தத் தொலைதூர புயல் சின்னம் காரணமாக, பாம்பன் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு திங்கள்கிழமை ஏற்றப்பட்டது. மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஆந்திரத்தில் உஷார் நிலை:
புயல் சின்னம் காரணமாக, ஆந்திரத்தின் 9 கடலோர மாவட்டங்களிலும் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. தேவையான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகங்களை, ஆந்திர அரசு கேட்டுக்கொண்டுள்ளது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக