கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் காவிரி டெல்டா பாசன வாய்க்கால்களை சீரமைக்கும் பணிகள், 23-ம் தேதி தொடங்கும் என்று பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 11 காவிரி டெல்டா மாவட்டங்களில் வாய்க்கால்களைத் தூர்வாரும் பணிக்கு இந்த ஆண்டு ரூ.12 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில் கடலூர் மாவட்டத்துக்கு ரூ.2.5 கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் 1.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் காவிரிப் பாசனப் பகுதிகள் ஆகும். கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிக்கு கடந்த ஆண்டு ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு ரூ.2.5 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. கடலூர் மாவட்ட டெல்டா பாசனப் பகுதிகளுக்கு காவிரி நீரை விநியோகிக்கும் கொள்ளிடம் கீழணை வாய்க்கால்கள், வடவாறு, வீராணம் வடக்கு ராஜன் வாய்க்கால்கள் மற்றும் அவற்றின் கிளை வாய்க்கால்கள் தூர் வாரப்படும். கடந்த ஆண்டு காவிரி டெல்டா பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணி ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கி, ஆகஸ்ட் மாத இறுதியில்தான் முடிவுற்றது. அதற்குள் காவிரி நீர் பாசனத்துக்குத் திறக்கப்பட்டு விட்டது. இதனால் வாய்க்கால்கள் முறையாக மராமத்து செய்யப்படவில்லை என்ற விவசாயிகள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. காவிரி டெல்டா பகுதிகளில் பாசன வாய்க்கால்களை சீரமைக்கும் பணி முன்னரே தொடங்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை. அதை ஏற்று இந்த ஆண்டு வாய்க்கால்கள் சீரமைக்கும் பணியை முன்னரே தொடங்க அரசு ஆணை பிறப்பித்து உள்ளது. வாய்க்கால்கள் தூர்வாரும் பணி வரும் 23-ம் தேதியே தொடங்கும் என்று கடலூர் மாவட்டப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜூன் முதல் வாரத்தில் தூர்வாரும் பணிகள் அனைத்தும் முடிவடைந்து விடும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். சில வாய்க்கால்களில் தற்போது தண்ணீர் உள்ளது. காய்ந்து கிடக்கும் வாய்க்கால்கள் முதலில் தூர்வாரும் பணிக்கு எடுத்துக் கொள்ளப்படும். மற்ற வாய்க்கால்களில் ஈரம் காய்ந்ததும் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாய்க்கால்கள் தூர்வாரும் பணி குறித்து பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ரவீந்திரன் கூறியது:
கடந்த ஆண்டு கடலூர் மாவட்டத்தில் காவிரிப் பாசன வாய்க்கால்கள் மராமத்துப் பணிகள், காலதாமதாகத் தொடங்கியதால் முறையாக நடைபெறவில்லை. எனவே இந்த ஆண்டு முன்னரே தொடங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அதை ஏற்றுக் கொண்டு, முன்னரே பணிகள் தொடங்க நிதிஒதுக்கி ஆணை பிறப்பித்ததற்கு முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறோம். வருவாய்த் துறை ஆவணங்களில் உள்ளபடி வாய்க்கால்களின் முழு அகலத்துக்கும் தூர்வாரப்பட வேண்டும். வாய்க்காலின் முழு அகலமும் அளந்து கல் பதிக்க வேண்டும். வாய்க்கால்களில் தூர் வாரப்படும் மண்ணை கரையிலேயே போட்டு விடுவதால், மழை பெய்ததும் மணல் முழுவதும் சரிந்து வாய்க்காலுக்குள் விழுந்து விடும். இதைத் தவிர்க்க அப்புறப்படுத்தும் மண்ணை வாய்க்காலின் கரைகளில் இருந்து 3 அடிக்கு அப்பால் கொட்ட வேண்டும். தூர் வாரும் பணியில் ஜே.சி.பி. இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதால் இது சுலபமானது. மேலும் அகலம் அதிகம் இருக்கும் வாய்க்கால் கரைகள் அனைத்திலும், தரமான சாலைகளை அமைக்க வேண்டும். விவசாயம் இயந்திரமயமாகி விட்ட நிலையில், டிராக்டர் மற்றும் அறுவடை இயந்திரங்கள் உள்ளிட்ட அனைத்து வேளாண் இயந்திரங்களும் வயல்களுக்குச் சென்று வர வசதியாக, தரமான வேளாண் சாலைகள் அமைக்க வேண்டும். வாய்க்கால்களின் கரைகளில் கொட்டப்படும் மண், வேளாண் சாலைகள் அமைக்க வசதியாக இருக்கும் என்றார் ரவீந்திரன்.
downlaod this page as pdf