சேத்தியாத்தோப்பு:
பள்ளிக்கூடம் மற்றும் மக்கள் நெருக்கம் நிறைந்த பகுதியில் சுடுகாடு அமைந்துள்ளதால் மக்கள் தவிப்பிற்குள்ளாகியுள்ளனர்.
சேத்தியாத்தோப்பு பேரூராட்சி எல்லைக்குட்பட்ட சென்னிநத்தம் கிராம பொதுமக்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னிநத்தம் தெற்கு பகுதியில் வெள்ளாற்றை ஒட்டியுள்ள இடத்தை சுடுகாடாக பயன்படுத்தி வருகின்றனர். 30 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் ஒருசில வீடுகளே இருந்தன. ஆனால் தற்போது இப்பகுதியில் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் சுடுகாட்டின் அருகில் பள்ளிக் கட்டிடம், மாணவியர் விடுதி, ஆரம்ப சுகாதார நிலையம், செயல்படாத ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் ஆகியவை அமைந்துள்ளன. சுடுகாட்டில் பிணம் எரிக்கும் போது பொதுமக்கள் மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள பள்ளிக்கூட மாணவ, மாணவிகளும் அச்சத்தில் உள்ளனர். மேலும், பிணவாடை வீசுவதால் நோய் ஏற்படும் நிலையும் உருவாகிறது. வடக்கு சென்னிநத்தம் பகுதி மக்களோ, தங்கள் பகுதிக்கு அரசு சுடுகாட் டிற்கான இடம் ஒதுக்கிக் தரவில்லை. அதனால் எங் கள் கிராமத்திற்கு சொந்தமான பட்டாவில் சுடுகாடு அமைத்துக் கொண்டோம். அரசு இடம் கொடுத்தால் சுடுகாட்டை மாற்ற தயாராக இருக்கின்றோம் என்கின்றனர்.சுடுகாடு இருக்கும் பகுதியில் வசிக்கும் ஒரு சிலர் வடக்கு சென்னிநத்தம் கிராமவாசிகளில் மத உணர்வை தூண்டி அரசியல் நடத்த முற்படுகின்றனர். இதேபோன்ற அவலநிலை வடக்கு சென்னிநத்தம் பகுதியை ஒட்டியுள்ள தங்கராசு நகர் பகுதியிலும் நிலவி வருகிறது. அப்பகுதியில் சென்னிநத்தம் ஆதிதிராவிட மக்களின் சுடுகாடு அமைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் நூற்றுக்கணக்கான குடும்பத்தினரும் அவதியடைந்து வருகின்றனர். மக்கள் நெருக்கம் மிகுந்த இவ்விரு இடங்களிலும் அமைந்துள்ள சுடுகாட்டை மாற்றி, பாதையுடன் கூடிய சுடுகாட்டை மாவட்ட நிர்வாகம் உருவாக்கி தரவேண்டும்.