நெல்லிக்குப்பம்:
மின் தட்டுப்பாடு நிலவும் நேரத்தில் செங்கல் சூளைகளில் தேவையில்லாமல் இரவு முழுவதும் 200க்கும் மேற்பட்ட பல்புகள் எரிகின்றன. நெல்லிக்குப்பம் மாளிகைமேடு விழுப்புரம் சாலையில் மாளிகைமேடு சாலையையொட்டி தரமான விவசாய நிலங்கள் உள்ளன. இந்நிலங்களில் எந்த பயிர் செய்தாலும் நன்கு விளையும் தன்மை கொண்டவை. விவசாயிகள் அதிகப்படியான பணத் துக்கு ஆசைப்பட்டு தங்கள் நிலங்களை செங்கல் சூளைக்கு குத்தகைக்கு விடுகின்றனர். இப்பகுதியில் சாலையோரம் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு 50க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளது. இங்கு தினமும் இரண்டு, மூன்று சூளைகள் எப்போதும் எரிந்து கொண்டே இருக்கும்.இதில் வரும் அளவுக்கு அதிகமான புகை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதுடன் வாகனங்களில் செல்வோர் மூச்சுத் திணறலும், கண் எரிச்சலும் ஏற்பட்டு எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி ஒவ்வொரு சூளையிலும் இரவு முழுவதும் தேவையில்லாமல் 200க்கும் மேற்பட்ட மின் விளக்குகள் எரிந்து கொண்டிருக்கிறது. மின் தட்டுப்பாடு நிலவும் நேரத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்தை தவறாக பயன்படுத்தி எரியும் விளக்குகளை அதிகாரிகள் பார்வையிட்டு முறைப்படுத்த வேண்டும்.