ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து நவீன அம்சங்களுடன் கூடிய ஜிசாட்}4 செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி. டி3 ராக்கெட் வியாழக்கிழமை மாலை 4.27 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட "கிரையோஜெனிக்' என்ஜின் மூலம் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படுவது இதன் சிறப்பம்சம் ஆகும்.
50 மீட்டர் உயரம் கொண்ட இந்த ராக்கெட் மொத்தம் 416 டன் எடை கொண்டது. ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் ரூ. 420 கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.எல்.வி. டி3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டால், அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகளோடு "கிரையோஜெனிக்' தொழில்நுட்பம் வைத்துள்ள 6வது நாடாக இந்தியாவும் இடம்பெறும்.தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை புவிசுற்று வட்டப்பாதையில் செலுத்துவதில் "கிரையோஜெனிக்' என்ஜின் முக்கியப் பங்கை வகிக்கிறது என்பதால், இந்திய விண்வெளிப் பயணத்தில் இது ஒரு முக்கிய மைல் கல்லாக இது இருக்கும்.
ஏறத்தாழ 1,022 விநாடிகளில் 36 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில், புவி வட்ட மாற்றுப் பாதையில் ஜிசாட்}4 செயற்கைக்கோளை இந்த ராக்கெட் நிலை நிறுத்தும்.இதற்கான 29 மணி நேர கவுன்ட்டவுன் புதன்கிழமை காலை 11.27 மணிக்கு தொடங்கியது.
19 ஆண்டுகள் உழைப்பு:
ஏறத்தாழ 19 ஆண்டுகள் கடின உழைப்புக்குப் பிறகு இந்திய விஞ்ஞானிகள் உள்நாட்டிலேயே "கிரையோஜனிக்' என்ஜினை தயாரித்து சாதனை புரிந்துள்ளனர்.திட, திரவ, குளிர்விக்கப்பட்ட வாயு (கிரையோஜெனிக்) என மூன்று அடுக்குகளில் எரிபொருள்களைப் பயன்படுத்தும் வகையில் ஜி.எஸ்.எல்.வி. டி3 ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது.குளிர்விக்கப்பட்ட வாயு பயன்படுத்தப்படும் மூன்றாவது நிலையில் "கிரையோஜெனிக்' (குளிர்விப்பு) என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் திரவ ஆக்சிஜனும், திரவ ஹைட்ரஜனும் எரிபொருள்களாகப் பயன்படுத்தப்படும்.
ராக்கெட்டின் மொத்த பயண நேரமான 1022 விநாடிகளில், 720 விநாடிகள் கிரையோஜெனிக் என்ஜின் மூலமே ராக்கெட் செலுத்தப்படும்.ஜிசாட்}4 செயற்கைக்கோள்: 2,220 கிலோ எடை கொண்ட ஜிசாட்4 செயற்கைக்கோளில், "கே' பேண்ட் டிரான்ஸ்பாண்டர், ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்துடன் கூடிய "ககன்' பேண்ட்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன."கே' பேண்ட் டிரான்ஸ்பாண்டரில் உள்ள 8 பீம்களின் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவையும் ஒரே நேரத்தில் படம் பிடிக்கலாம். இதன் மூலம் மேம்பட்ட டிஜிட்டல் சிக்னல்களை வழங்க முடியும்.துல்லியமான டி.டி.எச். சேவை, செல்போன் சேவை, ஆன்லைன் வர்த்தகம், அதிவேக இன்டர்நெட், கூடுதல் ஏ.டி.எம். மையங்களை நிறுவுதல் போன்றவற்றுக்கு கே பேண்ட் டிரான்ஸ்பான்டர் உதவும்."ககன்' பேண்ட்கள்:
"ஜி.பி.எஸ்.' தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள ககன் பேண்ட்கள், விமானப் போக்குவரத்து சேவையை மேம்படுத்த உதவும். குறிப்பாக, விமானங்கள் துல்லியமாக தரையிறங்க இவை பயன்படும். ஜிசாட் 4 செயற்கைக்கோளின் ஆயுள்காலம் 7 ஆண்டுகள் ஆகும்.