நடுவீரப்பட்டு:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த நடுவீரப்பட்டு பஸ் நிறுத்தத் திற்கு அருகில் உள்ள புளியந்தோப்பில் அமைக்கப்பட்டுள்ள தரை மட்ட ஆழ்துளை கிணறு (போர் வெல்) எந்த நேரத்திலும் சிறுவர்களை 'காவு' வாங்க காத்திருக்கும் நிலையில் உள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த நடுவீரப்பட்டு ஊராட்சி பஸ் நிறுத்தம் அருகில் புளியந்தோப்பில் அரசு ஆண்கள் ஆரம்ப பள்ளி உள்ளது. அதன் அருகில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஓ.என்.ஜி.சி. மூலம் பெட்ரோல் கண்டு பிடிப்பதற்காக 400 அடி ஆழத் திற்கு ஒன்னரை அடி அகலத்திற்கு பெரிய அளவில் ஆழ்துளை கிணறு (போர் வெல்)போடப்பட்டது. பெட்ரோலிய பொருட்கள் எதுவும் கிடைக்காததால் பைப் கட்டி விட்டுச் சென்று விட்டனர். அந்த பைப் இரண்டு அடி உயரத்திற்கு இருந்தது. சில மாதங்களுக்கு முன் சமூக விரோதிகள் அந்த பைப்பை தரை மட்டத்திற்கு உடைத்து எடுத்துச் சென்று விட்டனர். தற்போது தரை மட்டத்தில் உள்ள ஆழ் துளை கிணறு, அவ்வழியே செல்லும் சிறுவர்களை எந்த நேரத்திலும் 'காவு' வாங்க காத்திருக்கிறது. இந்த போர்வெல் இருக்கும் வழியாகத்தான் நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையம், மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றிற்கு பொது மக்களும், மாணவ, மாணவிகளும் சென்று வருகின்றனர். உயிர் சேதம் ஏற்படும் முன் ஆழ்துளை கிணற்றை முழுமையாக மூடுவதற்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
downlaod this page as pdf