கடலூர்
கடலூரில் காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்து இருக்கிறது.கோடை காலத்தில் தக்காளி விலை பெரும்பாலும் குறைவாகவே இருக்கும்.
ஆனால் 20 தினங்களுக்கு முன் கிலோ ரூ. 8 ஆக இருந்த தக்காளி விலை, தற்போது ரூ. 28 ஆக உயர்ந்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் ஏற்பட்ட புயல் பாதிப்பு காரணமாக அங்கிருந்து தக்காளி வரத்து குறைந்திருப்பதே விலை ஏற்றத்துக்குக் காரணம் என்று வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள்.15 தினங்களுக்கு முன் கிலோ ரூ. 20 ஆக இருந்த கேரட் ஞாயிற்றுக்கிழமை ரூ. 36 ஆக உயர்ந்து விட்டது. கிலோ ரூ. 10 ஆக இருந்த கோஸ் ரூ. 14 ஆகவும், ரூ. 12 ஆக இருந்த சின்ன வெங்காயம் ரூ. 16 ஆகவும், ரூ. 16 ஆக இருந்த பீட்ரூட் ரூ. 24 ஆகவும், ரூ. 20 ஆக இருந்த பீன்ஸ் ரூ. 44 ஆகவும், ரூ. 6 ஆக இருந்த கத்தரிக்காய் ரூ. 16 ஆகவும் விலை உயர்ந்துள்ளது.பொதுவாக ரூ. 50-க்கு மேல் காய்கறி வாங்கினால் சில கடைகளில் சிறிய கத்தை கொத்தமல்லி, கறிவேப்பிலை இலவசமாக வழங்குவார்கள். ரூ. 2-க்கு சிறிய கத்தை கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை விற்பனை செய்யப்பட்டு வந்தது.
ஆனால் கடந்த 15 தினங்களாக கொத்தமல்லி கறிவேப்பிலையை சந்தைகளில் பார்ப்பதே அரிதாகி விட்டது.ரூ. 5-க்கு குறைவாக, கொத்தமல்லி, கறிவேப்பிலை விற்பதில்லை. அதுவும் வாடி வதங்கிய நிலை. கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் இருந்து கொத்தமல்லி வரத்து முற்றிலும் நின்றுபோய் விட்டதே விலை உயர்வுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. அதிக வெப்பம் காரணமாக மரங்களில் கறிவேப்பிலை இலைகள் கருகத் தொடங்கி இருக்கின்றன.கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு, காய்கறி விளைச்சல் குறைவாக இருப்பதே விலை உயர்வுக்குக் காரணம் என்று கடலூர் காய்கறி வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள்.
மேலும் கோடை வெயில் சுட்டெரிப்பதால் காய்கறிச் செடிகளில் காய்கள் குறைந்து, வாடத் தொடங்குவதாகவும் கூறுகிறார்கள்.கடந்த 45 நாள்களாக மீன்கள் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் மீன்கள் விலை சாதாரண மீன்கள் கிலோ ரூ. 100-ல் இருந்து ரூ. 180 ஆகவும், விலை உயர்ந்த மீன்கள் ரூ. 250-ல் இருந்து ரூ. 500 ஆகவும் உயர்ந்து விட்டது. மீன்பிடித் தடை நீங்கி கடலுக்குள் சென்ற மீனவர்களோ, உள்ளூர் மக்கள் விரும்பிச் சாப்பிடும் மீன்கள் அதிகம் கிடைக்கவில்லை எனக் கைவிரிக்கிறார்கள்.கடந்த ஆண்டு கிலோ ரூ. 240 ஆக விற்பனை செய்யப்பட்ட ஆட்டிறைச்சி தற்போது, ரூ. 280 ஆக உயர்ந்து விட்டது.
ஏழை எளிய மக்கள் வாங்கிச் சாப்பிடும் நிலையில் இல்லை. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது மளிகைச் சாமான்கள் விலை, இந்த ஆண்டு 20 முதல் 30 சதவீதம் வரை உயர்ந்து இருக்கிறது.சாதாரணமாக கிலோ ரூ. 40-க்கு விற்பனை செய்யப்படும் பூண்டு, தற்போது ரூ. 80 ஆக உயர்ந்து இருக்கிறது. கிலோ ரூ. 45 ஆக இருந்த மிளகாய் வற்றல் ரூ. 55 ஆகவும், ரூ. 40 ஆக இருந்த உளுந்து ரூ. 75 ஆகவும் உயர்ந்து இருக்கிறது. மணிலா, பாமாயில் எண்ணெய் விலை ரூ. 20 சதவீதம் வரை உயர்ந்து இருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக