கடலூர்:
குடிநீரில் கழிவு நீர் கலந்து நோய் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் கழிவு நீர் கலந்து காலரா போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க அனைத்து கிராம ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் கீழ் கண்டவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டியது ஊராட்சியின் கட்டாயமாகும். அனைத்து கிராம ஊராட்சிகளால் பராமரிக்கப்பட்டு வரும் மேல்நிலை நீர் தேக்கத்தொட்டிகளையும் இரு நாட்களுக்குள் சுத்தம் செய்ய வேண்டும். குளோரினேஷன் செய்யப்பட்டு பாதுகாப்பான குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக இலவசமாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். குடிநீரில் பாக்டீரியாக்கள் பரிசோதனை செய்ய வேண்டியிருந்தால், குடிநீர் வடிகால் வாரியம் மூலம் வழங்கப்படும் கண்ணாடி குடுவைகளில் குடிநீர் மாதிரிகள் சேகரம் செய்து ஒப்படைக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிநீர் வழங்கும் குழாய்களில் கழிவு நீர் கலக்காமல் இருக்க குடிநீர் குழாய்களில் உடைப்புகள், ஓட்டைகள் மற்றும் கசிவுகள் காணப்பட்டால், அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும். குடிநீர் பிடிக்கும் இடங்களில் திருகு குழாய் இல்லாமல் இருந்தால் உடனடியாக திருகு குழாய் பொருத்தவும், பள்ளம் தோண்டி தண்ணீர் பிடிக்கும் இடங்கள் இருந்தால் பள்ளத் தினை மூடி, சுகாதார முறைப்படி அமைக்க வேண்டும். இப்பணிகளை போர்க்கால அடிப்படையில் தீவிரமாக முடிக்க அனைத்து கிராம ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை சம்மந்தப் பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (கி.ஊ) மூலமாக அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் பற்றாளர்கள் நியமனம் செய்து கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என கலெக்டர் சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக