கடலூர் :
கல்விக்கட்டணத்தை அரசே நிர்ணயித்த போதிலும் தனியார் பள்ளிகள் கூடுதலாக வசூலித்து வருகின்றனர். இதனால் நடுத்தர வர்க்கத்தினர் கல்விக்கட்டணத்தை செலுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.
பிரி கேஜில் "மம்மி, டாடி' என துவங்கி நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் மாணவர்களுக்கு சமுதாயத்தில் நல்ல மதிப்பு இருப்பதாக கருதுகிறோம். இதன் விளைவாக பெற்றோர்கள் ஆங்கில மொழியில் கற்பிக்கும் தனியார் பள்ளிகளை நாடிச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. தமது குழந்தைகள் படித்து பெரிய அளவில் வரவேண்டும் என்கிற பெற்றோர்களின் கனவால் தான் தனியார் பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் "மவுசு' கூடி வருகிறது.சாதாரண விவசாய கூலித்தொழிலாளி கூட துவக்க காலத்தில் எல்.கே.ஜி., க்கு 8 ஆயிரம் ரூபாய் செலுத்த கவலைப்படுவதில்லை. ஆறாம் வகுப்பை அடையும்போதுதான் விவசாயக்கூலி, நடுத்தர குடும்பத்திற்கு கல்வி கட்டணம் கசக்கி பிழிகிறது. தமிழகத்தில் தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணம் பெற்றோர்களிடம் தாறுமாறாக வசூலிப்பதாக நாளிதழில் விரிவான செய்தி வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் கட்டுப்படுத்தப்படும் எனவும், பள்ளிக்கட்டணத்தை அரசே நிர்ணயம் செய்யும் என முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.
அதன்படி அரசு, சென்னை ஐகோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் கட்டண நிர்ணயிப்புக்குழு ஒன்றை முதல்வர் அமைத்து பரிசீலனை செய்தார். இந்த குழு தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியவற்றை கணக்கிட்டு பள்ளி மாணவர்களுக்காக பெற்றோர்களிடம் வசூலிக்க வேண்டிய கட்டணத்தை நிர்ணயித்துள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் 398 பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு அதற்குரிய உத்தரவை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியின் மூலம் அனைத்து பள்ளி நிர்வாகிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு நிர்ணயித்த கட்டணத்தை புறந்தள்ளிவிட்டு பள்ளி நிர்வாகம்தம் இஷ்டம்போல் கட்டணத்தை தொடர்ந்து வசூலித்து வருகிறது. மாவட்டத்தில் ஒரு பள்ளிக்கூட அரசு நிர்ணயித்த கட்டணத்தை கடைபிடித்ததா என்றால் இல்லை.
அரசு நிர்ணயித்த கட் டண உத்தரவை மாவட்ட முதன் மைக்கல்வி அதிகாரி பள்ளி நிர்வாகிகளுக்கு கொடுத்து முடிக்கவேபோதும்போதும் என்றாகிவிட்டது. மாவட்டத்திலுள்ள பெரும்பாலான பள்ளிகள் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கூடுதல் கட்டணத்தை வசூலித்து வருகின்றன. அண்மையில் 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானதைத் தொடர்ந்து பிளஸ் 1 சேர்க்கையில் பள்ளிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. கடலூரில் உள்ள தனியார் பள்ளியில் புத்தகம், யூனிஃபார்ம் என சேர்த்து பிளஸ் 1 சேர்க்கைக்கு மட்டும் 28 ஆயிரம் ரூபாய் வரை கட்டணமாக வசூலித்து வருகிறது.அரசு நிர்ணயித்த கட்டணத்தை பள்ளிகள் அமல்படுத்தாததற்கு காரணம் என்ன? இதனை கல்வி அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதேன் என்கிற கேள்விகள் பெற்றோர்கள் மத்தியில் எழுந் துள்ளது.
பள்ளிகள் துவங்க இன்னும் சில தினங்களை உள்ள நிலையில், இனியேனும் கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? குறைந்தபட்சம் ஒவ்வொரு பள்ளிக்கும் அரசு நிர்ணயித்துள்ள கட்டண விபரத்தை அந்தந்த பள்ளிகளின் அறிவிப்பு பலகையில் எழுதி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக