விருத்தாசலம் :
விருத்தாசலம் அருகே நேற்று மாலை திடீரென சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்ததில், 40க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன; மின்னல் தாக்கியதில் மாணவி இறந்தார்; மரங்களும், மின்கம்பங்களும் முறிந்து விழுந்ததில் கிராமமே இருளில் மூழ்கியது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக கடும் வெயில் காய்ந்தது; அனல் காற்றினால் மக்கள் தவித்து வந்தனர். இந்நிலையில், நேற்று மாலை 4 மணிக்கு திடீரென கருமேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீசியது; சற்று நேரத்தில் மழை பெய்ய துவங்கியது. மாலை 5 மணி அளவில் விருத்தாசலம் அடுத்த விஜயமாநகரம் கிராமத்தில் திடீரென சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. சூறைக் காற்றில் குடிசை வீடுகளின் கூரைகளும், ஓட்டு வீடுகளில் இருந்த ஓடுகளும் பறந்தன.
சூறைக் காற்றினால் 200க்கும் மேற்பட்ட மரங்களும், 25க்கும் மேற்பட்ட மின் கம்பங்களும் முறிந்து விழுந்ததில், 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. பலத்த மழை காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. கிராம மக்களை அச்சுறுத்திய சூறைக் காற்றும், பலத்த மழையும் மாலை 6 மணிக்கு ஓய்ந்தது. மின் கம்பங்கள் முறிந்து விழுந்ததால் கிராமமே இருளில் மூழ்கியது.
மாணவி பலி:
விருத்தாசலத்தை அடுத்த தொரவளூர் பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த பெரிய காலனியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகள் ரம்யா (18) மீது மின்னல் தாக்கியது. அதில், அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக