சிதம்பரம்:
வன்னியர்களுக்கு கேட்காமலேயே 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கியவர் முதல்வர் கருணாநிதி என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
காட்டுமன்னார்கோவில் இலவச கேஸ் அடுப்பு வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் பெ.சீதாராமன் தலைமை வகித்தார். பேரூராட்சி மன்றத் தலைவர் எம்.கணேசமூர்த்தி வரவேற்றார். விழாவில் துரை.ரவிக்குமார் எம்எல்ஏ, மாவட்ட வருவாய் அதிகாரி எஸ்.நடராஜன், ஒன்றியக் குழுத் தலைவர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.
விழாவில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 489 பேருக்கு இலவச கேஸ் அடுப்பை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியது:÷கடலூர் மாவட்டத்தில் இதுவரை 66,700 பேருக்கு கேஸ் அடுப்பு வழங்கப்பட்டுள்ளது. 3 லட்சத்து 35 ஆயிரம் 486 பேருக்கு இலவச கலர் டிவி வழங்கப்பட்டுள்ளது. காட்டுமன்னார்கோவில் ஒன்றியத்தில் மட்டும் இன்னும் 1 மாதத்தில் 7,137 பேருக்கு இலவச கலர் டிவி வழங்கப்படவுள்ளது. கடலூர் மாவட்டத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இதுவரை ரூ.635 கோடிக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் சாலை மேம்பாட்டு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
விவசாயத் தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு திருமண உதவித் தொகை, இறுதிச்சடங்கு நிதிஉதவி, கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை தமிழக மக்களுக்கு முதல்வர் கருணாநிதி செய்துள்ளார். இதனால் தமிழக கிராமங்கள் செழிப்பாக உள்ளது. விவசாயத் தொழிலாளர்களுக்கு ரூ.51 கோடியே 60 லட்சத்து 50 ஆயிரம் வரை நலத்திட்டங்களை இம்மாவட்டத்தில் வழங்கியுள்ளோம். திமுக ஆட்சியில் நெல் மூட்டை ரூ.800-க்கு விற்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதிமுக ஆட்சியில் உயர்த்தப்படாத கரும்பு மற்றும் நெல் கொள்முதல் விலை திமுக ஆட்சியில் உயர்த்தப்பட்டுள்ளது என எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
பின்னர் கீழக்கடம்பூர் ஊராட்சியில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 6401 பேருக்கு இலவச கலர் டிவியை வழங்கிப் பேசினார். முன்னதாக ஆச்சாள்புரம் ஊராட்சியில் ரூ.6 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலகக் கட்டடத்தை அமைச்சர் திறந்து வைத்தார். ஊராட்சி மன்றத் தலைவர் நளினி செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக