சிதம்பரம்:
சிதம்பரம் அருகே உள்ள ஒரத்தூர் குறுவட்ட கிராமங்களுக்கு 2008-ம் ஆண்டு ஏற்பட்ட நிஷா புயல் மற்றும் வெள்ள பாதிப்புக்கு வழங்கப்பட்ட மிகக் குறைந்த 25.18 விழுக்காடு இழப்பீட்டை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து கீரப்பாளையம் ஊராட்சி அலுவலகம் முன்பு தமிழக உழவர் முன்னணி சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உழவர் முன்னணி மாவட்டச் செயலர் சி.ஆறுமுகம் தலைமை வகித்தார். ஆலோசகர் கி.வெங்கட்ராமன் சிறப்புரையாற்றினார். அய்யனூர் பொ.ரத்தினசங்கர் நன்றி கூறினார்.
இதுகுறித்து கி.வெங்கட்ராமன் தெரிவித்தது: 2008 நவம்பர் மாதம் ஏற்பட்ட நிஷா புயல், வெள்ளத்தால் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன. தமிழக அரசு பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கடலூர் மாவட்டத்தையும் ஒன்றாக அறிவித்தது. காப்பீடுத் திட்டத்தின் கீழ் ஒரத்தூர் குறுவட்டப் பகுதி கிராமங்களுக்கு 2008-ம் ஆண்டு 25.18 விழுக்காடு மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டது. இதுகுறித்து தமிழக உழவர் முன்னணியினர் முதல்வர் மற்றும் ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பினர். 2008-ம் டிசம்பர் 5-ம் தேதி சாலை மறியல் போராட்டம் அறிவித்தனர். அறிவிப்பை தொடர்ந்து சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 4.10.2009, 7.10-2009- ல் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இழப்பீடு தொகையை அதிகரிப்பது குறித்து வேளாண் காப்பீட்டு கழகத்திற்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்வதாக முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை இழப்பீடு தொகை அதிகரித்து வழங்கப்படவில்லை என கி.வெங்கட்ராமன் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக