பண்ருட்டி:
பண்ருட்டியில் திடீரென வெள்ளிக்கிழமை பெய்த மழையால், சம்பா நெல் அறுவடைப் பணி பாதிப்படைந்தது.
கடலூர் மாவட்ட பண்ருட்டி வட்டாரப் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா நெல் பயிரிடப்பட்டிருந்தது. இதன் அறுவடைப் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே இலங்கையில் இருந்து தமிழகம் வழியாக தெற்கு ஆந்திரம் வரை காற்றழுத்தத் தாழ்வு நிலை பரவியுள்ளதால், தமிழகத்தின் பல்வேறு பகுதியில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.÷இந்நிலையில் பண்ருட்டி வட்டாரப் பகுதியில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் சுமார் 1 மணி நேரம் பரவலான நல்ல மழை பெய்தது. இதனால் பண்ருட்டி வட்டாரத்தில் 500 ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெல் அறுவடைப் பணி தடைபட்டதுடன், நெல் கதிர்களை களத்திற்கு கொண்டு செல்லும் பணியும், கதிர் அடிக்கும் பணியும் பாதிப்படைந்தது. இந்த மழை மேலும் சில நாட்கள் நீடித்தால் விளைந்த நெல் பயிர்கள் மடிந்து முளைப்பு விட்டுவிடும் என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். மேலும் மணிலா, வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களுக்கு இம்மழை பயனுள்ளதாக இருக்கும் என கூறினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக