
நெய்வேலி:
நெய்வேலியில் நிறுவப்பட்ட எம்.ஜி.ஆர்., சிலையை 19 ஆண்டிற்கு பிறகு ஜெயலலிதா நேற்று திறந்து வைத்தார்.நெய்வேலி வட்டம் 9ல் கடந்த 1991ம் ஆண்டு எம்.ஜி.ஆர்., சிலை நிறுவப்பட்டது. பல்வேறு சிக்கல் காரணமாக சிலை திறக்கப்படாமல், மூடி வைக்கப்பட்டிருந்தது. இந்த சிலையை திறக்க கடந்த மாதம் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதையொட்டி நேற்று நடந்த சிலை திறப்பு விழாவில் பங்கேற்க அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, சென்னையிலிருந்து ஹெலிகாப்டரில் மாலை 3 மணிக்கு நெய்வேலிக்கு வந்தார். அங்கிருந்து காரில் சென்று வட்டம் 9ல் நிறுவப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்., சிலையை திறந்து வைத்தார்.பின், தமிழகத்தில் நிலவி வரும் மின் வெட்டைக் கண்டித்து நெய்வேலி மத்திய பஸ் நிலையம் அருகே நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி பேசினார்.
downlaod this page as pdf