கடலூர்:
கடலூரில் நடைபெற்று வரும் ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் முகாமுக்கு, இளைஞர்கள் சிலர் போலிச் சான்றுகளுடன் வருவது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ராணுவத்தில் சிப்பாய் நர்சிங் உதவியாளர், சிப்பாய் டெக்னீஷியன், சிப்பாய் பொதுப் பணி, சிப்பாய் கிளர்க், சிப்பாய் வர்த்தகப் பணி, ஸ்டோர்கீப்பர் டெக்னிகல் போன்ற பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் முகாம் கடலூரில் 13-ம் தேதி முதல் நடந்து வருகிறது. கடலூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்கள் மற்றும் புதுவையைச் சேர்ந்த இளைஞர்களுக்காக இந்த ஆள்சேர்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க வரும் இளைஞர்களுக்கு முதலில் உயரம் சரிபார்க்கப்படுகிறது. அடுத்து அவர்களின் கல்விச் சான்றிதழ்கள் பரிசோதிக்கப்படுகின்றன. இதில் இளைஞர்கள் சிலர் போலிச் சான்றிதழ் கொடுத்து ராணுவத்தில் சேர முயன்றது ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் அலுவலர்களால் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
சான்றிதழ்களில் மதிப்பெண்கள் திருத்தப்பட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதுவரை 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் போலிச் சான்றிதழ்களைக் கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டதாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். போலிச் சான்றிதழ் அளித்த இளைஞர்கள் உடனடியாக முகாமில் இருந்து வெளியேற்றப்பட்டதாகும் அவர் கூறினார். இளைஞர் ஒருவர் போலிச் சான்றிதழ் கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டால், உடனே காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகார் செய்வதுதான் முறை, என்றாலும் அந்த இளைஞரின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, அவ்வாறு செய்யாமல் முகாமை விட்டு வெளியேற்றி விடுவதாக அந்த அதிகாரி தெரிவித்தார். இடைத்தரகர்கள் சிலர் பணத்துக்காக இளைஞர்களுக்கு போலிச் சான்றிதழ்களை தயாரித்து அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
download this page as pdf