உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 19, 2010

மலேசியாவில் தங்க அனுமதி: தமிழக அரசுத் தரப்பில் மெளனம்

             சென்னை விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் மீண்டும் மலேசியாவில் தங்கியுள்ளார். அவருக்கு அந்த நாட்டு அரசு ஒரு மாத காலத்துக்கு விசா அனுமதி தந்துள்ளது. மலேசியா விசா முடிவடைந்த நிலையில், அங்கிருந்து வெள்ளிக்கிழமை இரவு விமானம் மூலம் அவர் சென்னைக்கு வந்தார். இந்திய அரசு ஆறு மாத காலத்துக்கு விசா தந்ததன் அடிப்படையில் அவர் சென்னை வந்தார்.ஆனால் சென்னை விமான நிலையத்தில் இருந்து அவரை வெளியே அழைத்துச் செல்ல அனுமதி கிடைக்கவில்லை.இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ நெடுமாறன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் விமான நிலையத்துக்குச் சென்றபோது, தமிழக காவல் துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.நீண்ட வாக்குவாதத்துக்குப் பிறகு விமான நிலைய வளாகத்துக்குள் சென்றனர். இருந்தாலும் பார்வதி அம்மாளையும், அவருக்குத் துணையாக வந்த பெண்ணையும் நள்ளிரவில் மலேசியாவுக்கே அதிகாரிகள் திரும்ப அனுப்பி வைத்தனர்.

                  இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்று கூறி ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் ஏராளமான தமிழர்கள் உயிரிழக்க காரணமாக இருந்த அதிபர் ராஜபட்ச இந்தியாவுக்கு வந்தால் கோவில்களில் பூரணகும்ப மரியாதை அளித்து வரவேற்கும் நிலையில், பிரபாகரனின் தாயாருக்கு சிகிச்சைக்கு கூட அனுமதி மறுக்கப்பட்டிருப்பது நியாயமற்றது என்று தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.ஆனால் பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பியது யார் என்ற கேள்விக்கு இன்னும் விடை தெரியவில்லை. மத்திய அரசு விசா கொடுத்திருந்த நிலையில், பார்வதி அம்மாளை அனுமதிக்க கூடாது என்று தமிழக காவல் துறையினர் ஆட்சேபம் தெரிவித்தனரா என்ற கேள்விக்கு மெüனமே பதிலாக இருக்கிறது.

                   னிக்கிழமை முழுக்க இதுபற்றி பரவலாகப் பேசப்பட்ட நிலையில், இதில் தமிழக அரசுக்கு சம்பந்தம் உண்டா, இல்லையா என்பது பற்றியோ, எதற்காக பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார் என்பது பற்றியோ அரசுத் தரப்பில் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. இதற்கிடையில், வெள்ளிக்கிழமை இரவு மலேசியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட பார்வதி அம்மாளுக்கு ஒரு மாத காலத்துக்கு அந் நாட்டு அரசு விசா அனுமதி கொடுத்துள்ளது. ஏற்கெனவே மலேசியாவில் சிகிச்சை பெற்று வரும் அவர், தொடர்ந்து அங்கேயே சிகிச்சை பெறுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதலுக்கு இந்திய அரசு உதவிகள் செய்கிறது என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது. இப்போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயாருக்கு, சிகிச்சைக்காக வந்தபோதுகூட, தமிழகத்தில் விமான நிலையத்தில் இருந்து வெளியேற அனுமதி கிடைக்கவில்லை என்ற பிரச்னை பரபரப்பாகப் பேசப்படுகிறது.

தமிழக அரசு இதனை செய்திருக்காது: ராமதாஸ்


              விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியை, முதல்வர் கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு திருப்பி அனுப்பியிருக்காது என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.சென்னைக்கு வந்து பார்வதி அம்மாள் சிகிச்சைப் பெற மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
 
இதுதொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
 
               விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் நோய்வாய்ப்பட்டிருக்கிறார். சிகிச்சைக்காக மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து அவர் சென்னைக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்தார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. விமானத்திலிருந்து அவரை இறங்கவிடாமல், மீண்டும் அதே விமானத்தில் மலேசியாவிற்கு திருப்பி அனுப்பிவிட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. சென்னையில் நவீன மருத்துவ சிகிச்சைக் கிடைப்பதால்தான் 81 வயதான அவர், இங்கே சிகிச்சைப் பெற வந்திருக்கிறார்.அவர் இந்தியாவுக்கு வருவதற்கான அனுமதியை கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் வழங்கியிருக்கிறது. அப்படியானால், இந்திய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது என்பதுதானே பொருள்.அப்படியிருந்தும், சென்னை நகரில் அவரை இறங்க விடாமல் தடுத்து நிறுத்தி, மீண்டும் மலேசியாவுக்கு அனுப்பி வைப்பதற்குக் காரணமானவர்கள் யார்?நிச்சயமாக தமிழக அரசும், தமிழக காவல்துறையும் இதனை செய்திருக்கமாட்டார்கள். அதற்கான அதிகாரம் அவர்களுக்கு இல்லை. முன்பு ஒருமுறை விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆலோசகர் பாலசிங்கம் மற்றும் சந்திரஹாசன் ஆகியோரை சென்னையிலிருந்து வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது. அதை எதிர்த்துப் போர்க்கொடி தூக்கி தடுத்து நிறுத்தியவர் முதல்வர் கருணாநிதி. எனவே, அவரது அரசு இதனை செய்திருக்காது.மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள குடியேற்றத் துறை அதிகாரிகள்தான் இந்தச் செயலை செய்திருக்கக் கூடும். 
 
                    இத்தகைய நடவடிக்கைகளுக்கு அதிகாரம் படைத்தவர்கள் அவர்கள்தான்.அவர்களது அனுமதியின்றி வெளிநாட்டவர் யாரும் இந்தியாவிற்குள் நுழைய முடியாது. சென்னை விமான நிலையத்தில் உள்ள குடியேற்ற அதிகாரிகள் தன்னிச்சையாக இந்த நடவடிக்கையை எடுத்திருக்கமாட்டார்கள்.மத்திய அரசின் அனுமதியில்லாமல், அவர்கள் கட்டளையிடாமல் இங்குள்ள குடியேற்ற அதிகாரிகள் செயல்பட்டிருக்க முடியாது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை மனிதாபிமானமற்றது என்பதில் சந்தேகமில்லை. உலகில் எந்தவொரு நாட்டிலும் இதுபோன்ற மனிதநேயமற்ற செயல் நடந்ததாக வரலாறு இல்லை.எவ்வளவு பெரிய குற்றம் செய்திருந்தாலும், மனிதாபிமான அடிப்படையில் சிகிச்சைப் பெற அனுமதிப்பதுதான் உலக நாடுகள் கடைப்பிடித்து வரும் நடைமுறை.
 
                        நமது பகை நாடுகளைச் சேர்ந்தவர்களும் இங்கே வந்து, சிகிச்சை பெற்றுச் செல்ல அனுமதி வழங்கி வரும் நிலையில், இங்குள்ள ஆறரை கோடி தமிழர்களை நம்பி சிகிச்சைப் பெற வந்த பார்வதி அம்மையாரை திருப்பி அனுப்பியதை தமிழர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். எனவே, சென்னையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ள பார்வதி, மீண்டும் சென்னைக்கு வந்து தேவையான மருத்துவச் சிகிச்சைப் பெற மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். மனிதாபிமான அடிப்படையில் அவருக்கு இந்த அனுமதியை வழங்கும்படி மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும் என்று ராமதாஸ் கோரியுள்ளார்.
 
தமிழகத்துக்கு அழைத்து வர வேண்டும்: தொல். திருமாவளவன்
 

மலேசியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை மீண்டும் தமிழகத்துக்கு அழைத்து வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
 
இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை:  
 
               இந்த நடவடிக்கைக்கு யார் காரணமாயிருந்தாலும், எது காரணமாயிருந்தாலும் அதை நியாயப்படுத்தவோ, ஏற்றுக்கொள்ளவோ இயலாது. மனிதநேயமற்ற இந்தப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது. பார்வதி அம்மாளை தமிழகத்திற்கு அழைத்து வரவும், அவர் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கும் உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

பிரபாகரனின் தாயாரை திருப்பி அனுப்பிய விவகாரம்: நெடுமாறன், வீரமணி, கிருஷ்ணசாமி கண்டனம்
 

          
               மருத்துவச் சிகிச்சைக்காக சென்னை வந்த விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள், மலேசியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட சம்பவத்துக்கு பல்வேறு  தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பழ. நெடுமாறன், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்
                    பிரபாகரனின் தாயார் பார்வதி 80 வயதை எட்டிய மூதாட்டி. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அவர், தனது கணவரை இழந்த பெரும் சோகத்திற்கு ஆளானவர். இலங்கைச் சிறையில் கணவரோடு பல மாதங்கள் அடைக்கப்பட்டு, பல கொடுமைகளுக்கு ஆளாகி, உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டவர்.அவர் இந்தியாவில் 6 மாதம் தங்கியிருக்க, வெள்ளிக்கிழமை காலையில்தான் இந்திய அரசு விசா வழங்கியது.  ஆனால், இரவில் சென்னை வந்த அவரை திருப்பி அனுப்பிவிட்டனர்.

                              பார்வதி வருவதை இந்திய அரசு விரும்பாவிட்டால், அவருக்கு விசா வழங்காமல் இருந்திருக்கலாம். காலையில் விசா வழங்கிவிட்டு, இரவில் திருப்பி அனுப்புவது என்பது அடாத செயலாகும். இந்திய அரசு விசா வழங்கிய பிறகு, சிலரின் வற்புறுத்தலின் பேரிலேயே பார்வதி திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார். 22-ல் வைகோ, பழ. நெடுமாறன் உண்ணாவிரதம்: பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பிய சம்பவத்தைக் கண்டித்து வரும் 22-ம் தேதி சென்னையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் ஆகியோர் உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளனர். பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவத்தை கண்டித்துள்ள வைகோ, மேற்படி போராட்டத்தை அறிவித்துள்ளார்.

கி. வீரமணி, திராவிடர் கழகத் தலைவர்:

பார்வதியிடம் முறைப்படியான விசா இருந்துள்ளது. அப்படியிருந்தும் அவரை சென்னையில் சிகிச்சை பெறக் கூட அனுமதிக்காமல், திருப்பி அனுப்பியதைவிட மனிதாபிமானமற்ற, கொடுஞ்செயல் வேறு இருக்க முடியாது.

                    இதற்கு மத்திய அரசோ அல்லது அதில் பணிபுரியும் அதிகாரிகளோ, யார் காரணம் என்றாலும்,  அது கண்டனத்திற்கு உரிய செயலாகும்.

க.கிருஷ்ணசாமி, புதிய தமிழகம் கட்சித் தலைவர்:

                   பிரபாகரனின் தாயார் என்பதைத் தவிர, வேறு எந்தக் குற்றமும் புரியாதவர் பார்வதி. அவர் நாடு கடத்தப்பட்டவரோ அல்லது சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியோ அல்ல. எனவே, அவருக்கு சென்னையில் மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அர்ஜுன் சம்பத் கண்டனம்:

சிகிச்சைக்காக சென்னை வந்த விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயாரைத் திருப்பி அனுப்பியதற்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

அக் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
           வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளம், மியான்மர் போன்ற அண்டை நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் ஊடுருவி இந்தியாவின் பொருளாதாரத்துக்கே ஆபத்து விளைவுக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

             இதைக் கண்டுகொள்ளாத மத்திய அரசு, சிகிச்சைக்காக சென்னைக்கு வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வேலுப்பிள்ளையின் மனைவியும், விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயாருமான பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பியது கண்டனத்துக்குரியது. இது மனிதநேயமற்ற செயல். இதுபற்றி தமிழக முதல்வரோ, மனிதநேய அமைப்புகளோ பேசாமல் இருப்பதும் வருத்தத்துக்குரியது. இதுகுறித்து உரிய விளக்கத்தை தமிழக முதல்வர் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

காவல் துறையினர் கருத்து

               பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் மருத்துவச் சிகிச்சைக்காக இந்தியா வருவதற்கு விண்ணப்பித்து இருந்ததாகவும் அதற்கு இந்திய அரசு அனுமதி அளித்திருந்ததாகவும் தெரிகிறது.

                  இந்நிலையில், வைகோ மற்றும் நெடுமாறன் உள்ளிட்டோர் விமான நிலையத்துக்கு போகாமல் இருந்திருந்தால் மற்ற பயணிகளை போல எந்த பிரச்னை இல்லாமல் அவர் சென்னைக்கு வந்து மருத்துவச் சிகிச்சை மேற்கொண்டிருக்கக் கூடும் என்று காவல் துறை வட்டாரங்கள் கருத்து தெரிவித்தன.
 

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior