கடலூர், நவ. 20:
கணவரை மதுவிலக்குப் போலீஸôர் கைது செய்ததால் மனம் உடைந்து மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக, 5 போலீஸ் காவலர்களை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார். சிதம்பரத்தை அடுத்த நஞ்சைமகத்து வாழ்க்கை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சண்முகம். அவரது மனைவி சாந்தி. கடந்த 30-4-2004 அன்று சண்முகத்தை சிதம்பரம் மதுவிலக்குப் போலீஸர் சாராயம் விற்றதாகக் கைது செய்ய முயன்றனர். அவர் வீட்டில் இல்லாததால் மனைவி சாந்தியைப் பிடித்துச் சென்றனர். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் சாந்தியிடம் போலீஸôர் பணம் வாங்கிக் கொண்டு அவரை விட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது. மறுநாள் சண்முகம் மதுவிலக்குப் போலீஸôரிடம் சரண் அடைந்தார். அவரைப் போலீஸôர் கைது செய்தனர். இதனால் மனம் உடைந்த சாந்தி, தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ஊர் மக்கள் கிளர்ந்து எழுந்ததன் காரணமாக, சிதம்பரம் சார் ஆட்சியராக இருந்த ராஜேந்திர ரத்னு விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை அனுப்பினார். இச்சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸ் காவலர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த, தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டு உள்ளது. இந்த வழக்கு கடலூர் முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. வழக்கு நீதிபதி ஜாகீர்உசேன் முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்டில் சம்பந்தப்பட்ட போலீஸ் காவலர்கள் நடராஜன், கலியமூர்த்தி, தனபால், பாஸ்கர், கணேசன் ஆகிய 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, நீதிபதி ஜாகீர் உசேன் உத்தவிட்டார். வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 17ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக