பண்ருட்டி, நவ. 19:
பண்ருட்டியில் உயிர் காக்கும் உயர் சிகிச்சை காப்பீட்டுத் திட்டத்திற்கான புகைப்படம் எடுக்கும் பணியால் பள்ளிகளில் இடைப் பருவத் தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிப்படைந்துள்ளனர். காப்பீடு திட்டத்தில் சேர்வதற்கான புகைப்படம் மற்றும் கைரேகை பதிவு செய்யும் பணி பண்ருட்டி நகரில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இத் திட்டத்தில் சேர தகுதியுடைய பயனாளிகள் அவரவர் வாக்கு செலுத்தும் மையத்தில் சென்று புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்படிருந்தது. பண்ருட்டி நகரில் பள்ளிகள், அலுவலகங்கள் என 37 மையங்களில் இப்பணி நடைபெற்றது. இதில் பெரும்பாலான மையங்கள் பள்ளிகளாகும். தற்போது மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இரண்டாம் இடைப்பருவத் தேர்வு நடக்கும் சமயத்தில், புகைப்பட பணி பள்ளி வளாகத்தில் நடைபெற்றதால் தேர்வு எழுதும் மாணவர்களிடையே கவனச் சிதைவை ஏற்படுத்தியதுடன், போதிய இடவசதி இல்லாததால் மாணவர்கள் வெளியில் அமர்ந்து தேர்வு எழுதினர்.இதேபோல் நகராட்சி பள்ளிகளில் புகைப்படம் எடுக்கும் பணி நடைபெற்றதால் இடவசதி இன்றி அனைத்து மாணவர்களும் ஒன்றாக அமர்ந்து இருந்தனர். மேலும் மழை பெய்து ஒழுகியதால் வகுப்பறைகள் நனைந்துள்ள நிலையில் புகைப்படம் எடுக்கும் பணிக்கு வகுப்பறைகள் ஒதுக்கியதால் மாணவர்கள் அவதி அடைந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக