நெய்வேலி, நவ. 20:
என்எல்சி தொழிற்சங்கக் கூட்டமைப்பு சார்பில் நிர்வாகத்திடம்
வெள்ளிக்கிழமை ஸ்டிரைக் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
என்எல்சி தொழிலாளர்களுக்கான புதிய போனஸ் மற்றும் ஊக்க ஊதியம், தொழிலாளர்களுக்கு எதிரான நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி தொழிற்சங்கக் கூட்டமைப்பு சார்பில் தொடர் போராட்ட நடவடிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வெள்ளிக்கிழமை தொழிலாளர்கள் ஊர்வலமாகச் சென்று நிர்வாகத்திடம் ஸ்டிரைக் நோட்டீஸ் வழங்குவது என முடிவுசெய்யப்பட்டது. அதற்கான ஊர்வலம் அம்பேத்கர் சிலையருகே தொடங்கியது. இந்த ஊர்வலத்துக்கு எச்எம்எஸ் சங்கத் தலைவர் சுகுமார் தலைமை வகித்தார். சிஐடியு சங்க தலைவர் குப்புசாமி ஊர்வலத்தைத் தொடங்கிவைத்தார். ஊர்வலத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். ஊர்வலம் என்எல்சி தலைமை அலுவலகத்தில் முடிவடைந்ததையடுத்து, தொழிற்சங்கக் கூட்டமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள், நிறுவன தலைமை அலுவலகத்தில் உள்ள நிர்வாகத்துறை அதிகாரியை சந்தித்து ஸ்டிரைக் நோட்டீஸ் வழங்கினர். இதைத் தொடர்ந்து நவம்பர் 24-ம் தேதி நெய்வேலி நகரின் முக்கியப் பகுதிகளில் தெருமுனைப் பிரசாரம் செய்யவிருப்பதாக எச்எம்எஸ் சங்கத் தலைவர் சுகுமார் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக