கடலூர் மாவட்ட வட்டாரப் போக்குவரத்துத் துறை பணியாளர்கள் செவ்வாய்க்கிழமை கறுப்புச் சின்னம் அணிந்து அலுவலகங்களுக்கு வந்து இருந்தனர். வட்டாரப் போக்குவரத்துறை அலுவலகங்களில் காலியாக இருக்கும் பணி இடங்களை நிரப்ப வேண்டும், தொழில் நுட்பப் பிரிவினர் மற்றும் தொழில்நுட்பப் பிரிவு அல்லாத அமைச்சுப் பணியாளர்களிடையே பாரபட்சமாக நடந்து கொள்ளும் போக்கைக் கைவிட வேண்டும் என்ற கோரிக்கைளை வலியுறுத்தி, தமிழ்நாடு போக்குவரத்துப் பணியாளர்கள் ஒன்றியத்தைச் சேர்ந்த ஊழியர்கள் கறுப்புச் சின்னம் அணிந்து வேலைக்கு வந்திருந்தனர். டிசம்பர் 2-ம் தேதி மாநிலம் முழுவதும் அனைத்து ஊழியர்களும் ஒட்டுமொத்த சிறுவிடுப்பு எடுக்கப் போவதாகவும் அறிவித்தனர். இதுகுறித்து அரசுப் பணியாளர் சங்க மாநிலத் தலைவர் கு.பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையில் 900 பணியிடங்கள் காலியாக உள்ளன. 300 உதவியாளர் பணியிடங்களில் நிரப்பப் படாமல் உள்ளன. ஒழுங்கு நடவடிக்கை, பதவிஉயர்வு, தளர்வாணை வழங்குதல் போன்றவற்றில் தொழில்நுட்பப் பணியாளர்களுக்கும் அமைச்சுப் பணியாளர்களுக்கும் இடையே பாரபட்சம் காட்டப்படுகிறது. பணி சீரமைப்புக்காக இத்துறையில் ஏற்படுத்தப்பட்ட துணைப் போக்குவரத்து நிர்வாக ஆணையத்தின் அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்படாமல் உள்ளது. 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் தொடங்கப்பட்டு உள்ளது என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக