சர்க்கரை ஆலைக் கழிவுகளால் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன்
வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தலைமையில் நடந்தது. நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலைக் கழிவுகளால் 100 ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக, மாவட்ட விவசாயத் தொழிலாளர் சங்கச் செயலாளர் ரவீந்திரன் உள்ளிட்ட விவசாயிகள் புகார் தெரிவித்தனர். அதற்குப் பதில் அளித்து மாவட்ட ஆட்சியர் பேசியது: விளை நிலங்களை மாசுக் கட்டுப்பாடு வாரிய அலுவலர்கள் பார்வையிட்டனர். பாதிப்பு இரு வகையில் ஏற்பட்டு இருக்கலாம். ஆலைக் கழிவுகளும் வெளியேறுகின்றன. நெல்லிக்குப்பம் நகராட்சிக் கழிவுகளும் அப்பகுதியில் வெளியேறுகின்றன. சர்க்கரை ஆலைக் கழிவுகளைப் போல் நகராட்சிக் கழிவுகளும் மோசமானவை. சலவைத் தூள்களில் இப்போதெல்லாம் மிக மோசமான ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன. அதனால்தான் அழுக்கு படிந்த துணிகளை பிரஷ் வைத்துத் தேய்க்க வேண்டாம் என்றெல்லாம் விளம்பரப்படுத்த தொடங்கிவிட்டனர். எனவே ஆலைக் கழிவுகள், நகராட்சிக் கழிவுகள், வயல்களில் தேங்கி உள்ள கழிவுகள், நிலத்தடி நீர் போன்றவற்றை ஆய்வு செய்ய மாசுக் கட்டுப்பாடு வாரியத்துக்கு உத்தரவிட்டு இருக்கிறேன். இப்பிரச்னைக்குத் தீர்வு காண ஒருங்கிணைந்த திட்டம் வகுக்கப்படும். சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். என்றார் ஆட்சியர். ஆட்சியர் மேலும் கூறியது: சிதம்பரம் புறவழிச் சாலையால் விவசாயத்துக்கு ஏற்பட்டு இருக்கும் பாதிப்புகள் குறித்து மத்திய அரசின் சாலைப் பிரிவு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காகத் தனித் திட்டம் தயாரித்து நிறைவேற்ற வேண்டும். சிதம்பரம் நகராட்சிக் கழிவுகள் கான்சாகிப் பாசன வாய்க்காலில் கலப்பதைத் தடுக்க, சிதம்பரம் நகராட்சி தனி சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். வெள்ளப் பாதிப்புகளுக்கு நிரந்தத் தீர்வு காணப்படும். கிராமப் புறங்களில் ஏராளமான களங்கள் காணப்படுகின்றன. தனியார் களமாக இருந்தாலும், அவற்றை மேம்படுத்த நமக்குநாமே திட்டத்தில் நிதி வழங்கத் தயாராக இருக்கிறேன் என்றார் ஆட்சியர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக