நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு காரணத்தால் மழை காலத்தில் கிடைக்கும் மழை நீர் வீணாவதுடன், வயல் வெளியில் பாய்ந்து விவசாயப் பயிர்கள் சேதம் அடைகின்றன. பண்ருட்டி வட்டத்தில் அண்மையில் பெய்த கன மழையால் பல ஆயிரக் கணக்கான விவசாய விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்தன. நீர் நிலை ஆக்கிரமிப்பு மற்றும் நீர் வழி ஆக்கிரமிப்பால் மழை நீர் செல்ல வழியின்றியே இச் சேதம் ஏற்பட்டுள்ளது. பண்ருட்டி நகரம் மற்றும் பண்ருட்டி, அண்ணாகிராமம் ஒன்றியப் பகுதிகளில் 28 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளின் மூலம் 3175 ஹெக்டர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தமிழகத்தில் கடந்த இரு வாரங்களாக பெய்த மழையால் நத்தம்,எலந்தம்பட்டு, சேமக்கோட்டை, எழுமேடு,அவியனூர் பைத்தாம்பாடி, கரும்பூர், உளுந்தாம்பட்டு, அக்கடவள்ளி, கண்டரக்கோட்டை, புலவனூர், வீரப்பார், விசூர் உள்ளிட்ட ஊர்களில் உள்ள 15 ஏரிகள் நிரம்பி வழிகின்றன. மேலும் உள்ள 13 ஏரிகளில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இவற்றில் பெரும்பாலான ஏரிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு நெல், கரும்பு போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. இந்த ஆக்கிரமிப்பால் ஏரியின் நீர்ப் பிடிப்பு பகுதி குறைந்து உள்ளதுடன், ஏரியில் பயிரிடப்பட்ட பயிர்களை பாதுகாக்க ஏரியின் நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் மழைக்காலத்தில் நீர்ப் பிடிப்பு பகுதியில் மழை மற்றும் வெள்ள நீர் தேங்காமல் ஏரிகள் குறுகிய காலத்தில் வற்றிவிடுகின்றது.பண்ருட்டி மற்றும் அண்ணாகிராம பகுதியில் உள்ள பெரும்பாலான ஏரிகளை உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். இவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளும் முன் வருவதில்லை. மேலும் சிலர் தங்கள் நிலத்தின் அருகே உள்ள ஆறு, ஏரி, குளம், குட்டை கால்வாய், ஓடை ஆகியவற்றை ஆக்கிரமித்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இதனால் உபரி நீர் வெளியேற வழியின்றி விவசாய நிலங்களில் புகுந்து சேதத்தை ஏற்படுத்துகிறது. நீர்வள ஆதார அமைப்புகள் (பாசன பிரிவு) மூலம் ஏரி, ஆறு, கால்வாய், குளம் போன்றவை பராமரிக்கப்படுகின்றன. இவற்றை பராமரிக்க அரசு ஒதுக்கும் நிதியை, நீர்வள ஆதார அமைப்புகள் முறையாகப் பயன்படுத்துவதில்லை என குற்றச்சாட்டு எழுகிறது. இந்த அமைப்புகள் பண்ருட்டி வட்டத்தில் இவற்றை சீர் செய்யவில்லை, இவற்றை முறையாக செய்திருந்தால் மழை காலத்தில் தண்ணீர் வீணாகாமல் சேமிக்கப்படுவதுடன், விவசாய நிலங்களுக்கும் பாதிப்பு இருக்காது என சமூக ஆர்வளர்கள் தெரிவிக்கின்றன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக