கடலூர், டிச. 6:
விழுப்புரம் மயிலாடுதுறை அகல ரயில் பாதையில் விரைவில் சரக்கு ரயில் போக்குவரத்து தொடங்கும் என்று திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் சுப்பிரமணியம் தெரிவித்தார்.
நெல் லிக்குப்பம் ரயில் நிலையத்துக்கு சுற்றுச்சுவர் கட்டுவதில் எழுந்த பிரச்னை தொடர்பாக ஆய்வு செய்வதற்காக சுப்பிரமணியம் ஞாயிற்றுக்கிழமை நெல்லிக்குப்பம் வந்தார். அங்கு அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
விழுப்புரம்-மயிலாடுதுறை அகல ரயில் பாதைத் திட்டம் முடிவடையும் தருவாயில் உள்ளது. விரைவில் சரக்கு ரயில்கள் இயக்கப்படும். ரயில்வே நிலங்களில் ஆக்கிரமிப்புகள் படிப்படியாக அகற்றப்பட்டு வருகின்றன. கடலூர் திருப்பாப்புலியூர் ரயில் நிலையப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படும். இரட்டை ரயில்பாதை திட்டம் அமலாகும்போது அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டு விடும்.
திருப்பாப்புலியூர் லாரன்ஸ் சாலையில் ரயில்வே சுரங்கப்பதை அத்தியாவசியம் என்றே கருதுகிறோம். சுரங்கப்பாதை அமைக்க ரயில்வே இலாகா தயாராக இருக்கிறது. ஆனால், இதற்காக மாநில அரசிடம் இருந்து உறுதிசெய்யும் கடிதம் எதுவும் வரவில்லை. திருப்பாப்புலியூர் சுரங்கப்பாதை தொடர்பாக நானும் தமிழக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல அதிகாரிகளிடம் பேசி இருக்கிறேன் என்றார் சுப்பிரமணியம்.
திருப்பாப்புலியூர் லாரன்ஸ் சாலையில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி, கடலூர் பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள் எம்.நிஜாமுதீன், வெண்புறா குமார், வழக்கறிஞர்கள் திருமார்பன், மன்றவாணன், கவிஞர் பால்கி, சி.ஏ.தாஸ், கதிர்மணிவண்ணன், தங்க சுதர்சனம், துரைவேலு உள்ளிட்டோர் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் சுப்பிரமணியத்தைச் சந்தித்து கோரிக்கை அளித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக