கடலூர் லாரன்ஸ் சாலையில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் சு.திருமாறன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம்-மயிலாடுதுறை இடையே அகல ரயில்பாதைத் திட்டம் நிறைவடையும் நிலையில் உள்ளது. இப்பணிகள் முடிவு அடைந்ததும், கடலூர் லாரன்ஸ் சாலையில் உள்ள ரயில்வே கேட்டை நிரந்தரமாக மூடி, சுவர் வைக்கப் போவதாக ரயில்வே இலாகா அறிவித்து உள்ளது. ஆனால், இந்த இடத்தில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்பது கடலூர் மக்களின் நீண்டகால கோரிக்கை.
ரயில்வே மேம்பாலம் கட்டும்போதே சுரங்கப் பாதைக்கும் நிதி ஒதுக்கப்பட்டு, பணி நடைபெறவில்லை. தற்போது சுரங்கப்பாதை திட்டம் அனுமதிக்கப்பட்டும் பணிகள் தொடங்கப்படாத அவலநிலை நீடிக்கிறது.
சுரங்கப்பாதை கோரி கடலூர் பொதுநல அமைப்புகள் 16-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்து உள்ளன. எனவே ரயில்வே சுரங்கப்பாதைத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் விரைவில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக