பண்ருட்டி, டிச. 5:
மாளிகம்பட்டு கிராமத்தில் 5 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு பாதியில் நிற்கும் கூடுதல் பள்ளி வகுப்பறை கட்டுமானப் பணியை விரைந்து முடித்துத் தர வேண்டும். இல்லையேல் மக்களைத் திரட்டி போராட்டம் செய்யப்படும் என்று ஒன்றிய கவுன்சிலர் எழிலரசன் கூறினார்.
பண்ருட்டி வட்டம் மாளிகம்பட்டு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. தாழம்பட்டு, மாளிகம்பட்டு, பிள்ளையார்குப்பம் பகுதிகளை சேர்ந்த 450க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இப்பள்ளியில் படித்து வருகின்றனர்.
அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம் இப்பள்ளிக்காக 5 ஆண்டுகளுக்கு முன்னர் ரூ.4.60 லட்சம் செலவில் 3 வகுப்பறைகள் கட்டும்பணி தொடங்கியது. 75 சதவீதம் முடிவடைந்த நிலையில் இக்கட்டடப் பணியை அப்படியே விட்டுவிட்டனர். இதனால் இக்கட்டடம் தற்போது சிதலம் அடைந்து வருகின்றது.÷இது குறித்து மாளிகம்பட்டு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் எழிலரசன் கூறியது: மாளிகம்பட்டு கிராமத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பள்ளி இயங்கி வருகிறது. இக்கட்டிடத்தின் மேல் ஓடுகள் பதிக்கப்படவில்லை, பூச்சு வேலை மற்றும் தரை போடப்படாமல் உள்ளது. இடப்பற்றாக்குறையால் இந்த கட்டடத்தில் தான் மாணவர்கள் அமர்ந்து படித்து வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளாக பூர்த்தி செய்யப்படாமல் உள்ள இக்கட்டடம் சிதலம் அடைந்து வருகின்றது.÷இது குறித்து பண்ருட்டி ஒன்றிய அலுவலகத்தில் கேட்டதற்கு, "கட்டடம் ஒன்றியத்திடம் ஒப்படைக்கப்படவில்லை' என கூறிவிட்டனர். இக்கட்டடப் பணியை பூர்த்தி செய்து மாணவர்கள் பாதுகாப்பான சூழலில் கல்வி பயில மாவட்ட நிர்வாகமும், சம்மந்தப்பட்ட அதிகாரிகளும் முன்வர வேண்டும். இல்லை என்றால் கிராம மக்களை ஒன்று திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ஒன்றியக் கவுன்சிலர் எழிலரசன் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக