கடலூர், டிச. 8:
கடலூர் ரயில்வே சுரங்கப்பாதைத் திட்டம் காலதாமதமாவது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் பொதுநல அமைப்புகள் திங்கள்கிழமை கோரிக்கை விடுத்தன.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலர் சு.திருமாறன் தலைமையில் கடலூர் பொதுநல அமைப்புகளின் கூட்டமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து அளித்த கோரிக்கை மனு:
ம யிலாடுதுறை - விழுப்புரம் அகல ரயில்பாதைத் திட்டம் முடிவடையும் நிலையில் உள்ளது. ஆனால் இந்த மார்க்கத்தில் உள்ள திருப்பாப்புலியூர் லாரன்ஸ் சாலை சுரங்கப்பாதை திட்டம் இன்னமும் நிறைவேற்றப்படாமல் உள்ளது.
இந்த மார்க்கத்தில் ரயில்கள் ஓடத் தொடங்கினால், லாரன்ஸ் சாலையில் சுவர் வைத்துத் தடுக்க ரயில்வே ஏற்கெனவே முடிவு செய்து இருக்கிறது.
சுயநல சக்திகளுக்கு துணை போகும் சில அதிகாரிகளின் மெத்தனப் போக்கே, சுரங்கப்பாதை திட்டம் காலதாமதம் ஆவதற்குக் காரணம் என்று அறிகிறோம். எனவேதான் சுரங்கப்பாதை திட்டத்தை அமல்படுத்த பொதுநல இயக்கங்கள் 16-ம் தேதி முதல் நடத்த திட்டமிóட்டு இருக்கும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளித்து இருக்கிறது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்து இருக்கிறோம்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை நெல்லிக்குப்பம் வந்த ரயில்வே கோட்ட மேலாளர்,சுரங்கப்பாதை அமைக்க ரயில்வே தயாராக இருப்பதாகவும், மாநில நெடுஞ்சாலைத் துறையிடம் இருந்து ஒப்புதல் வரவில்லை என்றும் கூறியுள்ளார்.
எனவே இத்திட்டத்தை முறியடிக்க முயலும் சுயநல சக்திகளுக்கு மாவட்ட நிர்வாகம் மறைமுகமாகத் துணை நிற்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. வெளிப்படையான நிர்வாகம் இருப்பதை உத்தரவாதம் செய்யும் வகையில், இப்பிரச்னையில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய விடுதலைப் பேரவை மாநிலத் துணைச் செயலர் திருமார்பன், விடுதலைச் சிறுத்தைகள் வழக்கறிஞரணி மாவட்ட்ச செயலர் காத்தவராயன், ஓவியர் அணி மாநிலச் செயலர் ஜெயராமன் உள்ளிட்டோர் உடன் சென்று இருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக