நெய்வேலி, டிச. 5:
விருத்தாசலம் வட்டம் மங்களூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜா.ஏந்தல் கிராமத்தில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில் விருத்தாசலம் கோட்ட வேளாண் விளைபொருள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதுகுறித்து விருத்தாசலம் கோட்ட வேளாண் அலுவலர் ச.அமுதா வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: ஜா.ஏந்தல் கிராமத்தில் நீர்வள, நிலவள திட்டத்தின் கீழ் 15 உறுப்பினர்களைக் கொண்ட விளைபொருள் குழுக்கள் எள், மணிலா, பருத்தி மற்றும் மக்காச்சோள பயிர்கசளுக்காக அமைக்கப்பட்டுள்ளன.
இக் குழுக்களுக்கு வேளாண் வணிகத் திட்டங்கள், மேற்கண்ட பயிர்களுக்கான அறுவடை பின்செய் நேர்த்தி தொழில்நுட்பங்கள், லாபம் தரும் சந்தை வாய்ப்புகள், விளை பொருள்களை ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்வது ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
மேலும் விளை பொருள்களின் அறுவடைக் காலங்களில் எதிர்நோக்கும் விற்பனை விலை குறைவை ஈடுகட்ட ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில் இருப்பு வைத்து விற்பனை செய்வது, விற்பனைக் காலங்களில் பொருளீட்டு கடன்பெறும் வழி வகைகள், மக்காச்சோளம் விற்பனை செய்வதற்கு வேளாண் விற்பனைத் துறை சார்பில் தனியார் கோழித் தீவன பண்ணைகள் மூலம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்முதல் செய்யும் ஏற்பாடுகள் குறித்தும் அமுதா விளக்கினார்.
முன்னதாக விவசாய முன்னோடி விளைபொருள் குழுக் கூட்டத்துக்கு வேம்பன் தலைமை வகித்தார். உதவி வேளாண் அலுவலர் ஜெயபால் கூட்டத்துக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக